தமிழகத்தில் பனை மரங்களை அழிப்பதை அரசு தடை செய்ய வேண்டும்: குமரி ஆனந்தன்

தமிழகத்தில் பனைமரங்களை அழிப்பதை அரசு தடை செய்வதோடு, ஏரி குளங்களில் பனை மர விதைகளையும் அரசு அதிகம் நட வேண்டும் என முன்னாள் மக்களவை உறுப்பினரும், முன்னாள்
Updated on
1 min read

தமிழகத்தில் பனைமரங்களை அழிப்பதை அரசு தடை செய்வதோடு, ஏரி குளங்களில் பனை மர விதைகளையும் அரசு அதிகம் நட வேண்டும் என முன்னாள் மக்களவை உறுப்பினரும், முன்னாள் பனைத்தொழிலாளர்கள் நலவாரியத்தின் தலைவருமான குமரி ஆனந்தன் கேட்டுக் கொண்டார்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வலியுறுத்தி மதுரையில் இருந்து எட்டையாபுரம் வரையில் முன்னாள் மக்களவை தலைவரும், முன்னாள் பனைத்தொழிலாளர்கள் நலவாரியத்தின் தலைவரும் குமரிஆனந்தன் தனது ஆதாரவாளர்களுடன் கடந்த 19-ம் தேதி முதல் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.இதில் விருதுநகருக்கு திங்கள்கிழமை வந்த அவர் மாலையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பனைமரத்தின் அனைத்து பொருள்களும் பொதுமக்களின் பயன்பாட்டிற்குரியது ஆகும். அதனால் அரசு பனை மரமாக இருக்கிறது. பழங்காலத்தில் சேரமன்னர்கள் நாணயத்தின் ஒரு பக்கம் பனைமரத்தை பதித்திருந்தனர்.

தமிழகம் முழுவதும் 5 கோடி பனை மரங்கள் இருந்தது. தற்போதைய காலகட்டத்தில் அழிக்கப்பட்டு செங்கல் சூளைகளிலும், சுண்ணாம்பு காளவாசல் போன்ற இடங்களிலும் பயன்படுத்துகின்றனர்.  இம்மரம் 120 ஆண்டுகள் வாழக்கூடியது. அரசு மரத்தை கூழாக்கி காகிதங்கள் தயாரித்து வருவதால், மரம் வளர்ப்பதை ஊக்கு வித்து வருகிறது. அதேபோல், பனை மரங்கள் வளர்ப்பதையும் ஊக்கப்படுத்தும் வகையில் பனை ஓலைகளில் இருந்து முகவரி, வாழ்த்து அட்டைகள் அச்சிட்டு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதுபோன்றவைகள் மூலம் பனைத்தொழிலாளர்களுக்கு வாழ்வு கிடைப்பதோடு, தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் செய்யலாம்.

கேரளத்தில் தென்னை மரம் ஏறுவதற்கு இளைஞர்களுக்கு ரூ.350 உதவித் தொகையுடன் 30 நாள்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதோடு, அவர்கள் தொடர்ந்து இத்தொழில் மூலம் வாழ்வாதரம் பெறும் வகையில் தென்னை மரம் ஏறும் கருவியையும் அளிக்கிறது. இதேபோல், தமிழகத்திலும் ஏற்கனவே இருந்து வரும்  பனைத்தொழிலாளர்கள் மூலம் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து நவீன உபகரணமும் அரசு வழங்க வேண்டும். பனை மரங்களை அழிப்பதை அரசு தடைசெய்வதோடு பனை பொருள்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.

தற்போது, தமிழகத்தில் 39 ஆயிரம் ஏறி, கண்மாய்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற இருக்கிறது. அப்போது, ஆழப்படுத்தும் மண்ணை கரையில் பலப்படுத்தி, ஒவ்வொரு பத்தடிக்கும் ஒரு பனை மர விதை நடுவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். மதுக்கடைகள் இல்லாத வகையில் ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் கோடி வரையில் பனைமரம் மூலம் வருவாய் பெறும் வகையிலான திட்டத்தை அரசிடம் அளித்துள்ளேன். அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதற்கு தயாராகவே இருக்கிறேன்.

இப்பயணம் வயிற்றுக்கு சோறிட பாடிய பாரதி பிறந்த மண், காமராஜர் இலவச உணவு தொடங்கிய எட்டாயபுரத்தில் வருகிற 30ம் தேதி முடிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அப்போது, உடன் காங்கிரஸ் மாநில பிற்படுத்தப்பட்டோர் நல அமைப்பாளர் சிதம்பரபாரதி, மாவட்ட தலைவர் வேலாயுதம் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் நவீன் ஆகியோர் உடன் இருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com