
சமுதாயத்தில் எந்தப் பொறுப்பில் இருந்தாலும் தவறு செய்தவர்கள் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் குற்றச் செயல்கள் குறையும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மகளிர் நீதிமன்றத்தை (விரைவு மகிழா நீதிமன்றம்) திங்கள்கிழமை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து அவர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
நீதிபதி, வழக்குரைஞர், அரசியல்வாதிகள் என சமுதாயத்தில் எந்தப் பொறுப்பில் உள்ளவர்கள் தவறு செய்தாலும் காவல்துறையினர் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்போதுதான் குற்றச் செயல்கள் குறையும்.வழக்குரைஞர்கள், நீதிபதிகளின் பாதுகாவலர்கள். அண்மையில் நீதித்துறை நடுவர் தாக்கப்பட்டபோது, வழக்குரைஞர்கள் இதனைக் கண்டித்து மாநிலம் முழுவதும் குரல் எழுப்பினார்கள். அவர்களும் எங்களைப் போன்றே படித்துள்ளார்கள். அவர்கள் எங்களுக்குச் சமமானவர்கள். அவர்கள் சட்டத்தை மீற மாட்டார்கள். சட்டத்தை கையில் எடுக்கமாட்டார்கள். சட்ட புத்தகத்தைத்தான் கையில் எடுப்பார்கள்.
விருதுநகர் மாவட்டத்தில் மாநிலத்தில் 19-வது மாற்று சமரச தீர்வு மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக நீதிமன்றங்களில் நடைபெற்று வரும் குடும்பப் பிரச்னை வழக்குகள், சொத்துத் தகராறு, சிவில் வழக்குகள் மாற்று வழியில் விரைந்து முடிக்கப்படும் என்றார் அவர்.முன்னதாக நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி சி.எஸ்.கர்ணன் மரக்கன்று நட்டார்.
விழாவில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ரா.தாரணி வரவேற்றார். மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன், ஸ்ரீவில்லிபுத்தூர் வழக்குரைஞர் சங்கத் தலைவர் டி.கதிரேசன் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் மகிழா அமர்வு நீதிபதி ராஜலட்சுமி, சார்பு நீதிபதி எஸ்.கோவிந்தராஜ், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சாமுவேல் பெஞ்சமின், நீதித்துறை நடுவர்கள் பத்மா, கவிதா, சாத்தூர் நீதித்துறை நடுவர் முருகன் மற்றும் ஏராளமான வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி ஜான் ஆர்.டி.சந்தோஷம் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.