இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட காரைக்கால் பகுதி மீனவர்களின் 4 படகுகள் செவ்வாய்க்கிழமை காரைக்கால் மீன்பிடித் துறைமுகம் வந்து சேர்ந்தன.
காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரிமேடு கிராமம் சுபாஷ்சந்திரன், ராஜ், கீழகாசாக்குடிமேடு கிராமம் உலகநாதன், பட்டினச்சேரி கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி ஆகியோர் தங்களது படகில் கடந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் கடலில் மீன்பிடிக்க சக மீனவர்களுடன் சென்றபோது, எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் சென்ற 4 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. மீனவர்கள் ஏற்கெனவே விடுவிக்கப்பட்ட நிலையில், படகுகள் மட்டும் இலங்கை காங்கேசன் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.
தமிழகம், காரைக்கால் பகுதியை சேர்ந்த 87 படகுகள் நல்லெண்ண அடிப்படையில் படிப்படியாக விடுவிக்கப்படும் நிலையில், காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 4 படகுகளின் உரிமையாளர்களும், மத்திய வெளியுறவுத்துறை அனுமதியின்பேரில் கடந்த 29-ம் தேதி ஒரு படகில், படகு மெக்கானிக்கர்களுடன் காரைக்காலில் இருந்து இலங்கை புறப்பட்டனர்.
காங்கேசன் துறைமுகத்தில் தங்களது 4 படகுகளை இயக்கிக்கொண்டு 30-ம் தேதி சர்வதேச கடல் பகுதிக்கு இலங்கை கடற்படையினர் வழிகாட்டுதலில் வந்துசேர்ந்தனர். இவர்களை இந்திய கடலோரக் காவல்படையினர் அபீக், சார்லி 428 என்கிற 2 ரோந்துப் படகுகள் வழிகாட்டுதலில் காரைக்காலுக்கு கடற்படையினர் அழைத்துவந்தனர். இப்படகுகள் மீன்பிடித் துறைமுகத்துக்கு திங்கள்கிழமை காலை 9 மணியளவில் வந்து சேர்ந்தன. காரைக்கால் மீன்வளத்துறை அதிகாரிகள் வசம், மீனவர்களும், இவர்களது 4 படகுகளையும் இந்திய கடலோரக் காவல்படை அதிகாரிகள் ஒப்படைத்துவிட்டு திரும்பினர்.
பறிமுதல் செய்யப்பட்டு இலங்கையில் இருந்த படகுகளில் மீன்பிடி வலைகள், டீசல், கயிறு உள்ளிட்ட சாதனங்கள் இல்லை. வெறும் படகு மட்டும் இயங்கும் தகுதியில் இருந்தன. இதனை மீட்டு வந்துள்ளோம் என்றனர் மீனவர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.