மதுரை வைகையில் திங்கள்கிழமை பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரைத் தாண்டி கள்ளழகரைப் பக்தர்கள் நெருங்கி வணங்க முடியாத நிலை ஏற்பட்டது.
மதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை முன்னிட்டு, வைகை அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் ஆழ்வார்புரம் பகுதியில் பெருக்கெடுத்து ஓடியது.அழகர் இறங்கிய திருக்கண் மண்டபங்களிலும், சுற்றுப்புறங்களிலும் அதிகமாக போலீஸ் பாதுகாப்பு இருந்தது. இதனால் கிராம மக்கள் அழகரை காண வழக்கமாக நிற்கும் ஆற்று முகத்துவாரத்தில் அனுமதிக்கப்படவில்லை.ஏ.வி.பாலம் மேற்புறத்தில் அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகளும், அவர்களது வாகனங்களும் அனுமதிக்கப்பட்டனர். அழகர் இறங்குமிடத்தில் தமிழக அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், காமராஜ்,செல்லூர் ராஜு மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜி.சொக்கலிங்கம், ராமநாதன், மேயர் ராஜன் செல்லப்பா, மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருந்தனர்.
நகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், கிராமங்களிலிருந்தும் வந்திருந்த லட்சக்கணக்கான ஆண்களும், பெண்களும் ஓபுளாபடித்துறை தரைப்பாலம், தெற்கு, வடக்கு வைகை ஆற்றோர சாலை, ஏ.வி.பாலம் கீழ்ப்பகுதி, புதுப்பாலம் மேற்பகுதி, பேச்சியம்மன்படித்துறை தரைப்பாலம் ஆகியவற்றில் நின்றனர்.அழகர் ஆற்றில் இறங்குவதை 5 இடங்களில் பெரிய மின்னணுத்திரையில் ஒளிபரப்பினர். ஆனாலும், அழகரை நெருங்கிப்பார்க்க விரும்பியவர்கள் ஓடும் தண்ணீரில் இறங்கினர். நீரில் இறங்கக்கூடாது என போலீஸார் எச்சரித்தும் கேளாததால், தடியடி நடத்தி விரட்டினர்.ஆற்றில் கள்ளழகர் இறங்கும் போது அவரை மிக நெருக்கத்தில் மக்கள் சூழ்ந்து வருவது வழக்கம். ஆனால் பாதுகாப்புக்கு வந்த போலீஸôர் மற்றும் கள்ளழகர் குதிரை வாகனத்தை சுமந்தவர்கள் தவிர யாரும் நெருங்கமுடியாத நிலையில் பாதுகாப்பு இருந்தது. அழகர் விழாவில் இதுபோன்ற நிலையை தவிர்க்கவும் பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.
நேர்த்திக்கடன் பக்தர்கள், பொதுமக்கள் கள்ளழகரை வணங்கிட அண்ணாநகர், வண்டியூர் பகுதிக்கு தொடர்ந்து சென்றதால் அவ்வப்போது போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது. தெப்பக்குளத்தில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு அப்பகுதியே கோலாகலமாக காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.