பணம் மோசடி புகார்: அஞ்சல் அதிகாரி பணிஇடை நீக்கம்

பணம் மோசடி புகார் தொடர்பாக கிளை அஞ்சல் அதிகாரி திங்கள்கிழமை பணிஇடைநீக்கம் செய்யப்பட்டார்.
Updated on
1 min read

பணம் மோசடி புகார் தொடர்பாக கிளை அஞ்சல் அதிகாரி திங்கள்கிழமை பணிஇடைநீக்கம் செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ஆரியூரில் கிளை அஞ்சல் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு 10-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த அஞ்சல் நிலையத்தில் கிளை அதிகாரியாக இருப்பவர் தியாகராஜன். இவர் அஞ்சல் அலுவலகத்தில் வரும் முதியோர் உதவித்தொகை, மணியார்டர் மற்றும் வங்கி கணக்கில் பணம் செலுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

பணம் செலுத்தியது குறித்து கணக்கு புத்தகத்தில் பதிவாகவில்லை. ஆனால் பணம் செலுத்தியதாக முத்திரை மட்டும் அச்சிடப்பட்டு இருந்தது. இதை மறைப்பதற்காக, பொதுமக்களிடம் கணக்கு புத்தகத்தை உடனுக்குடன் வழங்காமல், காலம் தாழ்த்தி வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நாமக்கல் உட்கோட்ட கண்காணிப்பாளர் கனிமொழியிடம் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து ஆரியூர் கிளை அஞ்சல் அலுவலகத்தில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அலுவலகத்தில் பணம் இருப்பு குறைவு உள்ளிட்ட பல்வேறு மோசடிகள் நடந்து இருப்பது தெரியவந்தது. பின்னர் அவர் இதுகுறித்து  நாமக்கல் கோட்ட கண்காணிப்பாளர் முத்துராஜாவுக்கு தெரிவித்தார்.

இதை தொடர்ந்து கோட்ட கண்காணிப்பாளர் முத்துராஜ், ஆரியூர் கிளை அஞ்சல் அதிகாரி தியாகராஜனை பணிஇடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் அந்த கிளை தபால் நிலையத்தில் 100 சதவீத தணிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தணிக்கை முடிவடைந்தால் மட்டுமே பொதுமக்களின் பணம் எவ்வளவு மோசடி செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவரும் என அஞ்சல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com