விருதுநகர் அருகே டாஸ்மாக் பணியாளர் கொலைச்சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது: சிபிசிஐடி போலீஸார்  துப்பு துலக்கினர்

விருநகர் அருகே டாஸ்மாக் மேற்பார்வையாளர் கொலை வழக்கு  தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் 5 ஆண்டுகளுக்கு பின் துப்பு துலக்கி 2 பேரை கைது செய்து புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தினர்.
Updated on
1 min read

விருநகர் அருகே டாஸ்மாக் மேற்பார்வையாளர் கொலை வழக்கு  தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் 5 ஆண்டுகளுக்கு பின் துப்பு துலக்கி 2 பேரை கைது செய்து புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தினர்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே ஆவரங்குளத்தைச் சேர்ந்த ஆதிநாராயணனின் மகன் பாலகிருஷ்ணன்(36). அப்பகுதியில் உள்ள எ.முக்குளம் கிராமத்தில் அரசு மதுபானக் கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். கடந்த 29.4.2009 அன்று முக்குளம் கிராமத்திலிருந்து திருச்சுழி வங்கிக்கு பணம் செலுத்துவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றாராம். அதையடுத்து நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத காரணத்தால் அதிர்ச்சி அடைந்த இவரது மனைவி வசந்தி காணாமல் போனதாக எ.முக்குளம் காவல் நிலையத்தி்ல் புகார் செய்தார்.

இந்நிலையில் கடந்த 17.4.2013-ம் தேதி மேற்படி நபரின் இருசக்கர வாகனம் மதுரை மாவட்டம், கூத்தியார்குண்டு கிராமத்தில் பாழடைந்த கிணற்றில் கிடந்ததை ஆஸ்டின்பட்டி காவல் நிலைய போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அந்த வாகனம் தனது மகனின் வாகனம் என்பதை அறிந்த தந்தை ஆதிநாராயணன்-தாயார் பொன்னம்மாள் ஆகியோர் மதுரை உயர்நீதி மன்ற கிளையில் ஆள்கொணர்வு மனுத்தாக்கல் செய்தனர். அதை தொடர்ந்து வழக்கு சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இது குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்ததில் புல்வாய்க்கரையை சேர்ந்த டிரைவர் குறிஞ்சிநாதன்(46), ஆவாரம்பட்டியைச் சேர்ந்த சங்கர்(62) ஆகியோருக்கு தொடர்புள்ளதை அறிந்து விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து டி.எஸ்.பி மன்மதபாண்டியன் விசாரித்தார். அப்போது, இருவரும் நண்பர்கள் என்றும், அதில் காணாமல் போன பாலகிருஷ்ணன் மனைவி வசந்திக்கும், குறிஞ்சிநாதனுக்கும் தகாத உறவு இருந்ததால் பகை ஏற்பட்டுள்ளது. இதை மனதில் வைத்து கடந்த 29.4.2009ம் தேதி அன்று 10 மணிக்கு ஆவரங்குளத்திலிருந்து திருச்சுழிக்கு செல்கையில் பின்தொடர்ந்து சென்று இருவரும் பாலகிருஷ்ணனை கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் சடலத்தையும், இருசக்கர வாகனத்தையும் வாகனத்தில்(டாடாஏஜ்) ஏற்றிக் கொண்டு அருகில் உள்ள கண்மாய் பகுதிக்குச் சென்று தீவைத்து எரித்துள்ளனர். அதேபோல், இருசக்கர வாகனத்தை கூத்தியார்குண்டு அருகே உள்ள கிணற்றில் வீசியதாகவும் 2 பேரும் வாக்குமூலம் அளித்தனர். எனவே அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இருவரையும் சிபிசிஐடி போலீஸார் கைது செய்து விருதுநகர் நீதிமன்றம் ஜே.எம்-2 நீதிபதி பாலகிருஷ்ணன் முன்னிலையில் ஆஜார்படுத்தியதை தொடர்ந்து காவலில் வைக்க உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com