பிளஸ்2 தேர்வு: விருதுநகர் மாவட்டம் 97.46 சதவீதம் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றது

பிளஸ்2 பொதுத்தேர்வில் 97.46 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் கடந்தாண்டு இழந்த முதலிடத்தை விருதுநகர் மாவட்டம் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
Updated on
2 min read

பிளஸ்2 பொதுத்தேர்வில் 97.46 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் கடந்தாண்டு இழந்த முதலிடத்தை விருதுநகர் மாவட்டம் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

இம்மாவட்டத்தில் 75 மையங்களில் 192 பள்ளிகளைச் சேர்ந்த 10276 மாணவர்களும், 12030 மாணவிகளும் என மொத்தம் 22,306 பேர் தேர்வு எழுதினர். இதில், மாணவர்கள் 9869 பேரும், மாணவிகள்-11868 பேரும் என மொத்தம் 21737 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்தாண்டு 96.12 சதவீதமாக இருந்த நிலையில், 1.34 சதவீதம் கூடுதலாக பெற்று 97.46 சதவீதமாக நிகழாண்டில் அதிகரித்துள்ளது. இதில், அருப்புக்கோட்டை கல்வி மாவட்டம் கடந்தாண்டு 96.42 ஆகவும், தற்போது 97.03 ஆகவும் உயர்ந்துள்ளது. அதேபோல், விருதுநகர் கல்வி மாவட்டத்தில் கடந்தாண்டு 96.04 ஆக இருந்த தேர்ச்சி சதவீதம் 97.93 ஆகவும், ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில் 95.05 ஆக இருந்த தேர்ச்சி சதவீதம் 97.36 ஆகவும் அதிகரித்துள்ளது.

இம்மாவட்டம் 1985இல் தொடங்கியது முதல், 2013 ஆம் ஆண்டு வரை 28 ஆண்டுகளாக பிளஸ்2 தேர்வு தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்று வந்தது. கடந்தாண்டு முதலிடத்தை இழந்த நிலையில் 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இது கடந்த 29 ஆண்டுகளில் இருந்த தேர்ச்சி சதவீதத்தை விட அதிகம் பெற்று மீண்டும் இழந்த முதலிடத்தை பிடித்துள்ளது. இம்மாவட்டத்தில் பல்வேறு பிரச்னைகள் இருந்த போதிலும், அதை சாமளித்து ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றியதால் தான் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துதிருப்பதாக பெற்றோர்கள் மற்றும் கல்வி துறை அதிகாரிகள் ஆகியோர்  தெரிவித்தனர். 

இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார்  கூறியது: இழந்த முதலிடத்தை பெறுவதற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறையும் தகுந்த ஒத்துழைப்பு அளித்தது. அதன் அடிப்படையிலேயே பள்ளிகளி்ல் மாணவ, மாணவிகளின் தரம் அறிந்து கல்வி அளிக்கும் வகையில் மெல்ல கற்பவர்கள், பின்தங்கிய மற்றும் நன்றாக படிப்பவர்கள் ஆகியோரை கண்டறிந்து அதற்கேற்ப எளிதாக புரியும் வகையில் கற்பிப்பதற்காக ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்டங்களாக சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டன.

வகுப்பறையில் படிப்பில் கவனம் செலுத்தாமல் சேட்டை செய்யும் மாணவர்களுக்கு மனநல ஆலோசகர் மூலம் ஆலோசனையும் பள்ளிகளில் வழங்கப்பட்டது. அவர்கள் மாணவர்களின் மனநிலையை அறிந்து, அதற்கேற்ப குறிப்பிட்ட பாடங்களை படித்தால் தேர்ச்சி பெற முடியும் நம்பிக்கையும் ஏற்படுத்தினர். பின்தங்கியோருக்கு நவீன கம்யூட்டர் புரொஜக்டர் மூலம் பாடங்கள் கற்பித்தும், மடிக்கணினிகளில் குறுந்தகடுகளை பயன்படுத்தி படிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டன.

ஒவ்வொரு பள்ளியிலும் பட்டதாரி சிறப்பு ஆசிரியர்களை நியமித்து மாலை நேரங்களில் முக்கிய பாடங்களில் சிறப்புப் பயிற்சி அளிக்கவும், காலாண்டு, அரையாண்டு திருப்புதல் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு, தேர்ச்சி பெறுவதற்கு ஏற்ப முன்மாதிரி பயிற்சி அளித்து மாணவ, மாணவிகள் தேர்வுக்கு தயார் செய்யப்பட்டனர். அதோடு, ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றியதாலும், பெற்றோர்கள் அளித்த ஒத்துழைப்பு போன்ற காரணங்களால் தான் இழந்த முதலிடத்தை பிடிக்க முடிந்ததாக அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com