

விருதுநகர் அருகே ரயிலில் பயணம் செய்த சென்னை இளம்பெண்ணின் கை சிக்னல் கம்பத்தில் மோதி துண்டான சம்பவம் தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு ஆணையாளர் சதீஸ்குமார் மித்தல் அதிகாரிகளுடன் புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ரத்தினசாமியின் மகள் மகாலட்சுமி(22). இவர் நெல்லை அருகே தனது சகோதரரியின் ஊரான அம்பசமுத்திரத்திற்கு செல்வதற்காக சென்னையில் இருந்து தனது தாயார் பார்வதியுடன் கடந்த 8-ம் தேதி இரவு திருநெல்வேலி செல்லும் அனந்தபுரி விரைவு ரயிலில் ஏறி பயணம் செய்தார்.அந்த ரயில் 9-ம் தேதி காலையில் 7 மணிக்கு விருதுநகர் அருகே சத்திரப்பட்டியை கடந்த போது தண்டவாளம் ஓரத்தில் மழையால் சாயந்த நிலையில் இருந்த சிக்னல் கம்பத்தின் மீது இளம்பெண் கை மோதியதில் துண்டானது. தற்போது, மதுரை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையாளர் சதீஸ்குமார் மித்தல் சிறப்பு ரயிலில் வந்து கள்ளிக்குடி-விருதுநகர் இடையே உள்ள சத்திரரெட்டியபட்டி பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு தண்டவாளப் பகுதியில் விழுந்து கிடந்த சிக்னல் கம்பத்தையும் பார்வையிட்டு அங்கிருந்த அதிகாரிகளிடம் விசாரணை செய்தார். அப்போது, உடன் மண்டல மேலாளர் சுனில்குமார் கார்க், விருதுநகர் ரயில் நிலைய மேலாளர் சுப்புராஜன் உள்ளிட்ட அலுவலர்கள் இருந்தனர்.
அதையடுத்து, கை துண்டாகி மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மகாலட்சுமியிடம் விபத்து தொடர்பாக விசாரிக்க இருப்பதாகவும் ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.