

தலித்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் சமவாய்ப்பு கிடைக்கும் வகையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் போராட வேண்டும் என கோராக்பூர் இந்திய தொழில் நுட்ப மையத்தின் பேராசிரியர் ஆனந்த்டெல்டும்டே கேட்டுக் கொண்டார்.
விருதுநகரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 2-வது மாநில மாநாடு கந்தசாமி-ராஜம்மாள் அரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு மாநில தலைவர் சம்பத் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வரவேற்புரை வழங்கினார்.
இம்மாநாட்டில் கோராக்பூர் இந்திய தொழில்நுட்ப மையத்தின் பேராசிரியரும், அம்பேத்காரின் பேரனுமான ஆனந்த் டெல்டும்டே துவக்கவுரையாற்றி பேசியதாவது: கல்வி, வேலைவாய்ப்பில் சமவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இடஒதுக்கீட்டு முறையயை அரசு கொண்டு வந்தது. விடுதலை போராட்டக் காலத்தில் இந்துக்களை எதிர்த்து உடன் கட்டை ஏறுதல் முறையை தடுக்கவே போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, சாதி ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவில்லை. இந்திய அரசியல்மைப்பின் சிற்பி என் அம்பேத்காரை கூறினாலும், அதை தீயிட்டு கொளுத்துவதிலும் முதல் ஆளாக இருப்பேன் என்றார். இந்திய அரசியலமைப்பில் அந்த அளவுக்கு சாதி, மதமும் பின்னி பிணைந்திருக்கிறது.
இடஒதுக்கீடு முறை பின்பற்ற நிலையிலும் முழுமையாக பூர்த்தி செய்ய முடியாத நிலையே நீடித்துக் கொண்டு வருகிறது. அதேபோல் கிராமங்களைச் சேர்ந்த தலித்களுக்கு உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நுட்ப நிறுவனங்களில் வாய்ப்பு மறுக்கப்படும் நிலையே உள்ளது. இதுவரையில் கிராமங்களில் 10 சதவீதம் தலித்களின் வளர்ச்சி அடைந்த நிலையிலும், மீதமுள்ள 90 சதவீதம் பேர் எவ்வித முன்னேற்றம் இல்லாமல் கிராமங்களிலேயே உள்ளனர்.
இதுபோன்ற ஒடுக்கப்பட்டவர்களை திரட்டி உரிமைகளை பெற போராட்டங்களை தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கம் மேற்கொள்ள வேண்டும். இந்த இயக்கம் வெறும் ஆலய நுழைவு போராட்டங்களை தவிர்த்து, பணக்கார வீட்டு பிள்ளையும், ஏழை வீட்டு பிள்ளையும் ஒரு கல்வி நிறுவனத்தில் கல்வி பயில்வதற்கு வழியேற்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
இம்மாநாட்டில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.கிருஷ்ணன், வரவேற்புக் குழு தலைவர் எம்.ஊர்வாகவலன், மாநில பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.