மதுரையில் ஞாயிற்றுக்கிழமை காற்றுடன் மழை கொட்டியதால் சாலைகள் அனைத்தும் குளம்போல தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடந்த சில வாரங்களாகவே மதுரை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. லேசான தூறலாகவும், கனமழையாகவும் தொடர்ந்து பெய்துவருவது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த இரு நாள்களாக மதுரையில் வானிலை மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் திடீரென மழை கொட்டியது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் அனைத்துச் சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையின் போது காற்றும் வீசியது. இடி மின்னலும் காணப்பட்டன.
பெரியார் பேருந்துநிலையம், சிம்மக்கல், கோரிப்பாளையம், காமராஜர் சாலை என அனைத்து இடங்களிலும் மழை நீர் வெள்ளமெனத் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்துடனே சென்றனர். அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோயிலில் ஆடி வீதிகளில் தண்ணீர் முழங்கால் அளவுக்குத் தேங்கியிருந்தது. மதுரை ஊரகப் பகுதிகளில் மேலூர், கொட்டாம்பட்டி, அழகர்கோயில் மற்றும் திருமங்கலம், பேரையூர், வத்ராயிருப்பு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்தது. வாடிப்பட்டி பகுதியில் மிதமான மழை பெய்தது.
அமாவாசையை முன்னிட்டு மதுரை மாவட்டம் வத்ராயிருப்பு பகுதி சதுரகிரி மலையில் உள்ள மகாலிங்கம் கோயிலுக்கு மதுரையிலிருந்து ஏராளமானோர் சென்றிருந்தனர். திடீர் மழையால் சதுரகிரி தாணிப்பாறை, வாழைத்தோப்பு பகுதியில் காட்டாற்றில் அதிகளவு தண்ணீர் ஓடியது. இதனால் பக்தர்கள் மலையிலிருந்து கீழே வரமுடியாமல் தவித்தனர். அப்பகுதியினரும், போலீஸôரும் சென்று பக்தர்களை பத்திரமாக மீட்டனர்.
சனிக்கிழமை வாடிப்பட்டி ஆண்டிப்பட்டி பங்களாவில் மட்டும் 8 மில்லி மீட்டர் மழை பதிவான நிலையில், ஞாயிற்றுக்கிழமை மதுரை மாவட்டம் முழுதும் கனமழை பெய்ததாக பொதுப்பணித்துறையினர் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.