மதுரை காவல் ஆய்வாளர் மீது பெண் அளித்த புகார் மீது உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
மதுரை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு காட்டுப் பரமக்குடியைச் சேர்ந்த 22 வயது பெண் புகார் அளிக்க வியாழக்கிழமை வந்தார். அவரிடம் நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது பெண் தன்னிடம் மதுரை நகர் உதவி ஆணையர் கட்டுப்பாட்டில் உள்ள காவல் ஆய்வாளர் ஒருவர் நெருங்கிப் பழகியதாகவும், இதனால் தான் கர்ப்பிணியான நிலையில் தன்னை அவர் திருமணம் செய்யாமல் ஏமாற்றுவதாக கூறினார்.
இந்நிலையில் அப்பெண் திடீரென மயக்கமுற்றார். அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். முதல் கட்ட விசாரணையில் ராமநாதபுரம் காட்டுப்பரமக்குடி பகுதியைச் சேர்ந்த அப்பெண் சில மாதங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவரைக் காதலித்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவரைக் காணவில்லை என போலீஸாரும் தேடிவந்துள்ளனர். இத்தகைய சூழலில்தான் மதுரையில் தற்போது புகாருக்கு உள்ளான காவல் ஆய்வாளர் கட்டுப்பாட்டில் அப்பெண் இருந்ததாக கூறப்படுகிறது.
தற்போது புகாருக்குள்ளான காவல் ஆய்வாளர் மீது ஏற்கெனவே சோலையழகுபுரம் பகுதி பெண் புகார் கூறியுள்ளார். இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு பெண் புகார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாநகர் காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் கூறுகையில், புகாருக்குள்ளானவர் மீது துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மாநகர் காவல் துணை ஆணையர் (சட்டம், ஒழுங்கு) சமந்த்ரோஹன் ராஜேந்திராவிடம் கேட்டபோது, ஏற்கெனவே அவர் மீது புகார் எழுந்தது. தற்போதும் புகார் கூறப்படுகிறது. மாநகர் காவல் ஆணையர் உத்தரவின்படி சம்பந்தப்பட்ட ஆய்வாளர் மீதான புகார் குறித்து விசாரிக்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.