பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இல்லை. தேர்தல் உடன்பாடு, தேர்தல் முடிந்ததும் நிறைவடைந்துவிட்டது என்று பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
ஈரோட்டில் அவர் செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:
எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப்பின் அன்புமணி தலைமையில் பாமக நிச்சயம் ஆட்சி அமைக்கும். முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே லோக் ஆயுக்த சட்டத்தை கொண்டு வருவோம். முதல்வர், அரசு உயர் அதிகாரிகள் ஊழல் செய்தால் 6 மாதங்குக்குள் விசாரணை நடத்தி இச்சட்டம் மூலம் தண்டிக்க வழிபிறக்கும்.
அதேபோல சேவை பெறும் உரிமை சட்டத்தையும் முதல் கூட்டத்தொடரிலேயே அமல்படுத்துவோம். சிபிஎஸ்சி கல்விக்கு இணையான தரமான கல்வியை இலவசமாக வழங்குவோம். விவசாயிகளுக்கு தேவையான இடுபொருள்களை இலவசமாக விநியோகம் செய்வோம். நீர்நிலைகள் தூர்வாரமல் இருப்பதற்கு திமுக, அதிமுக அரசுகள் தான் காரணம்.
பாஜக கூட்டணியில் பாமக இருக்கிறது என பாஜக தலைவர்கள் தொடர்ந்து கூறிவருவது தொடர்பாக கேட்கிறீர்கள். பாமகவின் நிலைப்பாட்டை ஏற்கெனவே தெளிவாக தெரிவித்துவிட்டோம். இந்த கேள்விக்கு இதுதான் நான் அளிக்கும் கடைசி பதிலாக இருக்கும்.
பாமகவை பொருத்தவரை தேர்தல் நேரத்தில் அமையும் கூட்டணி தேர்தலோடு முடிந்துவிடும். வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தபோது குறைந்தபட்ச செயல் திட்டம் உருவாக்கப்பட்டு அதில் நான் கையெழுத்திட்டேன். அதோபல மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலும் குறைந்தபட்ச செயல் திட்டம் உருவாக்கப்பட்டு கையெழுத்திட்டிருந்தேன்.
ஆனால், மோடி அரசின் அப்படி ஏதும் திட்டம் உருவாக்கப்பட்டு நான் கையெழுத்திடவில்லை. எனவே, தேர்தல் கூட்டணி, தேர்தலுக்கு பின் முடிந்துவி்ட்டது. தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் இருப்பதாக பாஜக தலைவர்கள் கூறுவது பற்றி அவர்களிடம் தான் கேட்க வேண்டும். எங்களை பொருத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணியில் இப்போது இல்லை.
சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பாமக முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாஸை அறிவித்துவிட்டது. பாஜக மட்டுமல்ல எந்த கட்சிகளாக இருந்தாலும் அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டால் பாமக தலைமையிலான கூட்டணிக்கு தாராளமாக வரலாம்.
பாமக ஜாதி கட்சி என விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியது பற்றி கருத்துச்சொல்ல விரும்பவில்லை. நாங்கள் ஏதாவது கருத்து சொல்வோம் அதற்கு பதில் கருத்து சொல்லாம் என்ற நோக்கில் அவர் பேசி வருகிறார் என்றார் ராமதாஸ்.
பேட்டியின்போது பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, துணைப் பொதுச்செயலர்கள் பொ.வை.ஆறுமுகம், கா.சு.மகேந்திரன், மாநிலத் துணைத் தலைவர் என்.ஆர்.வடிவேல், மாவட்டச் செயலர் அருள்மொழி ஆகியோர் உடன் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.