தூத்துக்குடியில் காட்டாற்று வெள்ளம்: 500 வீடுகள் சேதம்

தூத்துக்குடியில் திங்கள்கிழமை காட்டாற்று வெள்ளம் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்ததால் ஏறத்தாழ 500 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன.
Updated on
1 min read

தூத்துக்குடியில் திங்கள்கிழமை காட்டாற்று வெள்ளம் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்ததால் ஏறத்தாழ 500 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தன.

தொடர் மழை காரணமாக தூத்துக்குடி அருகேயுள்ள தெற்கு வீரபாண்டியபுரம் குளம் உடைந்ததாலும், கோரம்பள்ளம் குளத்துக்குச் செல்லும் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதாலும் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது.

இதனால், புதுக்கோட்டை, ராஜூவ்நகர், அந்தோணியார்புரம், மங்களகிரி, சோரீஸ்புரம், மறவன்மடம், மேடகூட்டுடன்காடு, தட்டப்பாறை, திருவிகநகர், தபால் தந்தி ஊழியர் குடியிரிப்பு உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

இதேபோல, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களையும் தண்ணீர் சூழ்ந்தன. இதனால், அங்குள்ள ஆவணங்கள் தண்ணீர் மூழ்கி சேதமடைந்தன.

இதேபோல, வெள்ளநீர் புகுந்த பகுதிகளில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்தன. மேலும், தூத்துக்குடி- திருநெல்வேலி இடையேயும், தூத்துக்குடி- திருச்செந்தூர் இடையேயும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காட்டாற்று வெள்ளம் குறைந்த நிலையில், திங்கள்கிழமை இரவு போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. இருப்பினும், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கிய நிலையிலேயே காணப்படுகிறது.

தொடர் மழை மற்றும் வெள்ளநீர் புகுந்ததால் சோரீஸ்புரம் பகுதியில் ஏறத்தாழ 250 வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. இதேபோல, மழைநீர் புகுந்த இடங்களில் மொத்தம் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. 500-க்கும் மேற்பட்ட பாதியளவில் சேதமடைந்தன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு நிவாரணம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். மேலும், தொற்றுநோய் பரவாமல் தடுக்க அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com