தமிழக அரசுக்கு இ-பஞ்சாயத்து புரஸ்கார் விருது

மின்னணு ஆளுகை திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக இ-பஞ்சாயத்து புரஸ்கார் விருதினை மத்திய

மின்னணு ஆளுகை திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக இ-பஞ்சாயத்து புரஸ்கார் விருதினை மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் வழங்கியுள்ளது.

மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சக ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சிறப்பான நிர்வாகத்திற்காக ஊராட்சி கணக்குகளை கண்காணிப்பதற்கான கணக்கீட்டு மென்பொருள்(பிரியாசாப்ட்) உள்ளாட்சி அமைப்புகள் விவர தொகுப்பு (எல்.ஜி.டி), ஊராட்சிகளுக்கான தேசிய வலைத்தளம், தேசிய அளவிலான ஊராட்சி சொத்துக்கள் விவர தொகுப்பு மற்றும் ஊராட்சி அளவில் திட்டமிடலுக்கான பிளான் பிளஸ் ஆகிய மின்னணு ஆளுமை மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது.

அனைத்து ஊராட்சிகளிலும் மேற்கண்ட மின்னணு ஆளுகை திட்டங்களை செவ்வனே செயல்படுத்தும் பொருட்டு ரூ.79.50 கோடி செலவில் கணிப்பொறி, மின்னாக்கி, பிரிண்டர் மற்றும் அகண்ட வரிசை இணையதள இணைப்பு ஆகியவற்றை ஏற்படுத்திட தமிழ்நாடு அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மின்னணு ஆளுகை திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களை ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய அரசு இ-பஞ்சாயத்து புரஸ்கார் விருது என்ற விருதினை ஏற்படுத்தி ஆண்டு தோறும் சிறப்பாக செயல்படும் மாநிலகளுக்கு விருது வழங்கி வருகிறது.

அதன்படி 2014-15 ஆம் ஆண்டில் மின்னணு ஆளுகை திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக இ-பஞ்சாயத்து புரஸ்கார் விருது மற்றும் ரூ.20 லட்சத்திற்கான ரொக்கப் பரிசினை தமிழ்நாடு அரசிற்கு மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் வழங்கியுள்ளது.

மேற்கண்ட விருதினை பிரதமரிடமிருந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு செயலர் ககன்தீப் சிங் பேடி இன்று புதுதில்லி விக்யான் பவன் மண்டபத்தில் நடைபெற்ற தேசிய பஞ்சாயத்து ராஜ் தின மாநாட்டில் பெற்றார்.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் திட்ட செயலாக்கம், நிர்வாகம், நிதி மற்றும் அதிகார பரவலாக்கம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஊராட்சிகளை வலிமைப்படுத்தும் விருது என்ற விருதினை உருவாக்கியுள்ளது.

2014-15 ஆம் ஆண்டு மேற்கண்ட விருதினை பெற தமிழ்நாட்டைச் சேர்ந்த திருச்சி மாவட்டம், முடிகண்டம் ஊராட்சி, திருப்பூர் மாவட்டம், கொடவம்பாளையம் ஊராட்சி, கோயம்புத்தூர் மாவட்டம், குருடம்பாளையம் ஊராட்சி, நீலகிரி மாவட்டம், பர்லியார் ஊராட்சி, தூத்துக்குடி மாவட்டம், மேலபுதுக்குடி ஊராட்சி, விருதுநகர் மாவட்டம், அத்திப்பட்டி ஊராட்சி என 6 கிராம ஊராட்சிகளும், கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றியம், கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியம் என இரண்டு ஊராட்சி ஒன்றியங்களும் மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஆகியவற்றை மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் தேர்ந்தெடுத்துள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரொக்கப் பரிசாக ரூ.30 லட்சம் மாவட்ட ஊராட்சிக்கும், ரூ.20 லட்சம் ஊராட்சி ஒன்றியத்திற்கும் மற்றும் ரூ.8 லட்சம் கிராம ஊராட்சிகளுக்கும் அந்தந்த உள்ளாட்சிப் பகுதிகளின் வளர்ச்சிப் பணிக்காக பயன்படுத்திக் கொள்ள வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com