புதுவைக்கு ரூ.100 கோடி இடைக்கால மழை நிவாரணம்: மக்களவையில் எம்.பி.க்கள் கோரிக்கை
By சுஜித் குமார் | Published On : 03rd December 2015 04:06 PM | Last Updated : 03rd December 2015 04:06 PM | அ+அ அ- |

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி மாநிலத்துக்கு ரூ.100 கோடி இடைக்கால நிவாரணம் தர வேண்டும் என ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.பி. மக்களவையில் கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுவையின் வெள்ள சேதம் குறித்து விவாதம் மக்களவையில் வியாழக்கிழமை நடந்தது. அதில் பங்கேற்று புதுவை தொகுதி எம்.பி. ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
கனமழையினால் தமிழகம் மற்றும் புதுவையில் லட்சக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடலூரைப்போல புதுவையிலும் வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளது. புதுவை மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதம் குறித்து பிரதமர் நரேந்திரமோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோருக்கு முதல்அமைச்சர் ரங்கசாமி ரூ.182 கோடியே 45 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும் என கடிதம் அனுப்பி கோரியுள்ளார்.
கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக்குழுவினர் பார்வையிட்டனர். மத்தியக்குழுவை அனுப்பிய பிரதமருக்கு நன்றி. மத்தியக்குழு பார்வையிட்டு சென்ற பின்னர் புதுவையில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. வெள்ள சேதம் முன்பைவிட பல மடங்கு அதிகரித்துள்ளது.
புதுவை மாநிலம் பேரிடர் நிதியத்தில் இணைத்துக்கொள்ளப்படவில்லை. இதனால் அந்த நிதியத்திலிருந்து நிவாரணத்தொகைகூட கிடைக்கவில்லை. எனவே பேரிடர் நிதியத்தில் புதுவையை இணைக்க வேண்டும். இடைக்கால நிவாரணமாக ரூ.100 கோடி வழங்க வேண்டும் என்றார்.
அதிமுக எம்.பி. கோகுல கிருஷ்ணன்
இதே போல மாநிலங்களவையிலும் புதுவை வெள்ள சேதம் குறித்து நடைபெற்ற விவாதத்தில் அதிமுக எம்.பி. கோகுலகிருஷ்ணன் பேசியதாவது:
தமிழகத்தை போன்று புதுவை மற்றும் காரைக்காலில் இரண்டு வார காலமாக பெய்து வரும், கன மழையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளது. மரங்கள் விழுந்துள்ளன. சாலைகள் மழைநீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது. பாலங்கள், தடுப்பணைகள் சேதமடைந்துள்ளது.
மழையால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தினக்கூலி தொழிலாளர்கள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். சாலைகள் போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலைக்கு மாறிவிட்டது.
புதுச்சேரி ஏற்பட்டுள்ள மழை சேதத்தை கணக்கிட்டு, முதல்அமைச்சர் ரங்கசாமி ரூ.182.45 கோடி நிவாரணம்கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.வெள்ள சேதங்களை பார்வையிட மத்திய குழுவை அனுப்பி வைத்த பிரதமர் நரேந்திரமோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
ஏற்கனவே மழையால் பாதித்த நிலையில், வானிலை ஆய்வு மையம் மேலும் மழை நீடிக்கும் என தெரிவித்துள்ளது. எனவே, காலம் தாழ்த்தாமல் புதுவை மாநிலத்திற்கு, ரூ.100 கோடி இடைக்கால நிவாரணமாக மத்திய அரசு வழங்க வேண்டும். மற்றொரு மத்திய குழுவை புதுச்சேரிக்கு அனுப்பி மழை வெள்ள சேத மதிப்பை கணக்கிட வேண்டும் என்றார்.