மழை பாதிப்பு: தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் 71 பேர் புதுவை வருகை

மழைநிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 71 பேர் வியாழக்கிழமை புதுச்சேரிக்கு வந்தனர்.

மழைநிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 71 பேர் வியாழக்கிழமை புதுச்சேரிக்கு வந்தனர்.

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் ஏற்கெனவே புதுவையில் கடந்த 1 மாதமாக தொடர் மழை பெய்தது. இதனால் 400-க்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. 7 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலம் சேதமடைந்தது. மழை நிவாரணமாக ரூ.182.45 கோடி கோரி முதல்வர் ரங்கசாமி பிரதமருக்கு கடிதம் எழுதினார்.

இநநிலையில் வங்கக் கடலில் மீண்டும் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கடந்த 3 நாள்களாக புதுச்சேரியில் பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால் அனைத்து ஆறுகள், ஏரிகள், நீராதாரங்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 173 நிவாரண மையங்களில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பேரிடர் மீட்புக் குழுக்கள்

புதுவையில் மழை நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் 2 பேரிடர் மீட்புக் குழுக்களை அனுப்ப வேண்டும் என துணைநிலை ஆளுநர் ஏ.கே.சிங், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கோரினர்.இதன்படி 2 பேரிடர் மீட்புக் குழுக்கள் ஓடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து புதன்கிழமை இரவு அரக்கோணம் ராஜாளி கடற்படை விமான தளத்துக்கு வந்தன.

அங்கிருந்து அவர்கள் சாலை மார்க்கமாக வியாழக்கிழமை புதுவைக்கு வந்தனர்.புதுவை கோரிமேட்டில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். துணை காவல் கண்காணிப்பாளர் பிகே.தாஸ் தலைமையில் 2 ஆய்வாளர்கள், 4 எஸ்.ஐக்கள் உள்பட 71 பேர் கொண்ட குழுக்கள் வந்துள்ளன. புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள மாநில அவசர கால மீட்பு மையத்தில் பேரிடர் மீட்புக் குழு அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

டிஐஜி கண்ணன் ஜெகதீசன், சீனியர் எஸ்.பி. விஜே.சந்திரன், ஊரக வளர்ச்சி முகமை இயக்குநர் சு.பார்த்திபன், துணை ஆட்சியர்கள் வின்சென்ட் ராயர், ராஜமாணிக்கம், வட்டாட்சியர்கள், காவல்துறை, வருவாய்த்துறை, தீயணைப்பு அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் புதுச்சேரி மாநிலத்தில் எங்கு பேரிடர் குழுவினரை மீட்புப் பணியில் ஈடுபடுத்தலாம் என ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்துக்கு பின் டிஐஜி கண்ணன் ஜெகதீசன் கூறியதாவது:

நவீன கருவிகளுடன் பேரிடர் மீட்புக் குழுவினர் புதுவை வந்துள்ளனர். புதுவை அரசு நிர்வாகத்துக்கு அவர்கள் உறுதுணையாக செயல்படுவர். தீவிர பாதிப்பு உள்ள இடங்களில் அவர்கள் பயன்படுத்திக் கொள்ளப்படுவர்.

காரைக்காலுக்கு ஒரு குழு

காரைக்காலில் கன மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதிக்கும் ஒரு மீட்புக் குழு அனுப்பி வைக்கப்படும் என்றார் கண்ணன் ஜெகதீசன்.

புதுச்சேரிக்கு பேரிடர் மீட்புக் குழுக்கள் வந்துள்ளதால் நிவாரணப் பணிகள் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com