
கர்நாடகத்தில் அமைதி ஏற்படுத்தவும், காவிரிப் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவையும் அமைக்க பிரதமருக்கு ஆணையிடக்கோரி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.
இதுகுறித்து பாமக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரிப் பிரச்சினையை மையமாக வைத்து கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறை மற்றும் கலவரங்கள் குறித்து முறையிடுவதற்காக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களை தில்லியிலுள்ள அவரது மாளிகையில் பாமக இளைஞரணித் தலைவரும், தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 20 நிமிடங்கள் நீடித்தது.
குடியரசுத் தலைவருடனான சந்திப்பின் போது காவிரி பிரச்சினை குறித்தும், அதை மையப்படுத்தி கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக வன்முறையும், கலவரமும் கட்டவிழ்த்து விடப்பட்டது குறித்தும் அன்புமணி ராமதாஸ் அவர்கள் விளக்கினார். கர்நாடகத்தில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது குறித்தும், அதனால் பல இடங்களில் ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்தும் குடியரசுத் தலைவர் அவர்களிடம் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் எடுத்துக் கூறினார்.
கர்நாடகத்தில் இயல்பு நிலைமையை ஏற்படுத்தும் வகையில் அங்கு ராணுவத்தையும், துணை இராணுவப் படைகளையும் பாதுகாப்புக்கு அனுப்ப வேண்டும். நிலைமையை ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை கர்நாடகத்திற்கு அனுப்பும்படி பிரதமருக்கு ஆணையிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
தமிழ்நாடு மற்றும் கர்நாடக முதல்வரை அழைத்து இப்பிரச்சினை குறித்து பேச்சு நடத்த வேண்டும் என்றும், அதன்மூலம் கர்நாடகத்தில் அமைதியை ஏற்படுத்துவதுடன், இரு மாநிலங்களிடையே சகோதரத்துவத்தை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கும்படி அவர்களுக்கு அறிவுறுத்தும்படி பிரதமருக்கு ஆணையிட வேண்டும் என்றும் அன்புமணி கேட்டுக் கொண்டார்.
கர்நாடகத்தில் நடைபெற்ற கலவரங்களில் தமிழர்களின் உடமைகள் சூறையாடப்பட்டது குறித்தும், தமிழர்கள் தாக்கப்பட்டது குறித்தும் விளக்கிய அவர், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உரிய இழப்பீடும், நிவாரண உதவிகளும் வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதற்கெல்லாம் மேலாக இனி வரும் காலங்களில் காவிரிப் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவையும் அமைக்க பிரதமருக்கு ஆணையிட வேண்டும் என்றும் கோரினார்.
அதைக் கேட்ட குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரங்கள் வருத்தமளிப்பதாகக் கூறினார். இரு மாநிலங்களும் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும் என்றும், அனைத்து மாநிலங்களும் சட்டத்தை மதித்து நடந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அன்புமணி அவர்கள் முன்வைத்த அனைத்து கோரிக்கைகள் குறித்தும் மத்திய அரசுக்கு உரிய அறிவுரைகளை வழங்குவதாகவும் குடியரசுத் தலைவர் உறுதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.