மதுரையில் பிரேதப் பரிசோதனை இன்றி அடக்கம் செய்யப்படும் சடலங்கள்: மனித உரிமை ஆர்வலர்கள் புகார்

மேலும் அவர்கள் யார் என அடையாளம் காணப்படாமல், தத்தனேரி மயானத்தில் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதுரை நகரில் சாலையோரத்தில் இறப்பவர்களின் சடலங்கள் பிரேதப் பரிசோதனை செய்யப்படாமல் அடக்கம் செய்யப்படுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

 மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற்றோர் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அதில், வீட்டை விட்டு வெளியேறியவர்கள், முதுமையால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டவர்கள், வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் மனநோயால் பாதிக்கப்பட்டு இங்கு கொண்டு வந்து விடப்பட்டவர்கள் என 100-க்கும் அதிகமானோர் உள்ளனர். இவர்களுக்குப் புகழிடமாக இருப்பது சாலையோரங்கள் தான்.

 இதில் நோய், முதுமை மற்றும் வீட்டை விட்டு வெளியேறி கௌரவத்தை இழக்க விரும்பாமல் பட்டினி கிடந்து நோய்வாய்ப்பட்டவர்கள் என சாலையோரங்களிலேயே இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

பொதுவாக இதுபோன்று சாலையோரங்களில் இறப்புகள் நிகழும் போது, அப்பகுதிக்குள்பட்ட காவல் நிலையப் போலீஸார் இறந்தவரின் சடலத்தை மீட்டு புகைப்படம் எடுத்து, சடலத்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் அந்த புகைப்படத்தை துண்டுப்பிரசுரமாக அச்சிட்டு விநியோகித்து அடையாளம் காண முயற்சிக்க வேண்டும்.

 3 நாள்களுக்குள் இறந்தவரின் அடையாளம் தெரிந்து உறவினர்கள் யாரும் வராவிட்டால், ஆதரவற்றோர் எனக் கருதி, பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு போலீஸாரே கொண்டு சென்று அடக்கம் செய்ய வேண்டும். இதுதான் விதிமுறையாக இருந்து வருகிறது.

ஆனால் சமீப காலமாக சாலையோரங்களில் இறப்பவர்களின் சடலங்களை பிரேதப் பரிசோதனை செய்யாமல் அப்படியே அடக்கம் செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. அந்த சடலங்களை பிரேத பரிசோதனை செய்தால் மட்டுமே இறப்புக்கான காரணம் தெரியவரும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அது கொலையாக இருக்கவும் வாய்ப்புள்ளது.

 மதுரை நகரில் மே மாதத்தில் மட்டும் 12-க்கும் அதிகமான சடலங்கள் சாலையோரங்களில் மீட்கப்பட்டுள்ளன. இதில் சில அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ஆனால் சந்தைப்பேட்டை, ரயில் நிலையம் எதிரில் உள்ள பாங்குர் தர்மசாலா பகுதி, திலகர் திடல், விளக்குத்தூண் காவல்நிலையப் பகுதிகளில் மீட்கப்பட்ட சடலங்கள் பிரேதப் பரிசோதனை எதுவும் செய்யப்பட வில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும் அவர்கள் யார் என அடையாளம் காணப்படாமல், தத்தனேரி மயானத்தில் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 இதுதொடர்பாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறும்போது, சாலையோரத்தில் வசித்த ஒருவர் திடீரென இறக்கும் போது, அவரது இறப்புக்கான காரணம் குறித்து கண்டறிய வேண்டிய கடமை போலீஸாருக்கு உண்டு. அது பிரேதப் பரிசோதனையில் மட்டுமே தெரிய வரும். அப்படி செய்யாமல் ஒரு சடலத்தை அடக்கம் செய்யும் போது, அதுகொலையாக இருந்தாலும் கூட குற்றவாளிகள் தப்பித்து விடும் வாய்ப்பு உண்டு.

 மேலும், சாலையோரத்தில் தங்குபவர்களுக்கு இடையேயும் தகராறு ஏற்பட்டு அது கொலையில் முடிந்ததும் உண்டு. எனவே சாலையோரத்தில் இறந்தவர், பிச்சைக்காரராக இருந்தாலும், மனநோயாளியாக இருந்தாலும் அவரது சடலத்தை பிரேதப் பரிசோதனை செய்து, இறப்புக்கான காரணத்தை கண்டறிந்த பிறகே அடக்கம் செய்ய வேண்டும். இதுபோன்ற சம்பவங்களில் காவல்துறை அதிகாரிகள் கண்காணித்து சடலங்களை பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com