
காந்திநகர் (குஜராத்): பாஜக தலைமையுடன் மோதலில் வென்ற குஜராத் துணை முதல்வர் நிதின் பட்டேலுக்கு அவர் ஏற்கெனவே வைத்திருந்த நிதித்துறை மீண்டும் வழங்கப்படும் என உறுதியை அடுத்து அமைச்சரவை பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.
சமீபத்தில் 182 தொகுதிகள் கொண்ட குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் 99 இடங்களில் பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டதை அடுத்துக் கடந்த 26-ஆம் தேதி முதல்வராக விஜய் ரூபானி பதவியேற்றுக் கொண்டார். துணை முதல்வர் நிதின் பட்டேல் உட்பட 19 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.
துணை முதல்வர் நிதின் பட்டேலிடம் ஏற்கெனவே இருந்த நிதி, நகர்ப்புற வளர்ச்சி ஆகிய துறைகளை மீண்டும் அவருக்கு ஒதுக்காமல், நெடுஞ்சாலை, நலவாழ்வு, மருத்துவக் கல்வி உள்ளிட்ட துறைகள் அவருக்கு ஒதுக்கப்பட்டன. இதனால் அதிருப்தி அடைந்த நிதின் பட்டேல், துணை முதல்வர் பதவி தனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என்பதால் நிதின் பட்டேல் ராஜிநாமா செய்யப்போவதாக தகவல்கள் வெளியானது.
கடந்த வெள்ளிக்கிழமை நடந்த அமைச்சரவை பொறுப்பேற்பு நிகழ்ச்சியை நிதின் பட்டேல் புறக்கணித்தார். தன்னிடமிருந்த நிதித்துறையை பறிக்கப்பட்டதை அவமானமாக கருதியே பங்கேற்கவில்லை எனவும் மேலும் தனக்கு அளிக்கப்பட்ட அரசு வாகனம் மற்றும் பாதுகாவலர்களையும் நிதின் பட்டேல் ஏற்க மறுத்துள்ளதாக தகவல் வெளியானது.
பாஜக மதிக்கவில்லை என்றால் துணை முதல்வர் நிதின் பட்டேல் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் கட்சியை விட்டு வெளியே வர வேண்டும் என நேற்று சனிக்கிழமை நிதின் பட்டேலுக்கு ஹார்திக் படேல் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தொலைபேசியில் பேசியதை அடுத்து நிதின் பட்டேல் இன்று தனது அமைச்சகப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டார்.
இதுகுறித்து நிதின் பட்டேல் செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் செயலகத்திற்கு செல்கிறேன், அமைச்சரவை பொறுப்புகளா ஏற்கிறேன் என்றவர் இன்று “காலை 7:30 மணியளவில் தொலைபேசியின் வாயிலாக அமித் ஷா எனக்கு அழைப்பு விடுத்தார், அவரிடம் என்னுடைய கவுரவம் மதிக்கப்பட வேண்டும் என்றேன், அவர் எனக்கு பொருத்தமான துறைகள் வழங்கப்படும் என்று உறுதியளித்தார்” என்றும் அமித் ஷா-வின் உத்தரவாதத்திற்கு நான் நன்றி கூறிக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.