புதுகையில் கணினித் தமிழ்ச்சங்கம் சார்பில் ஜன.18 -ல் மின்னூல் ஆக்க வழிகாட்டி முகாம்

புதுக்கோட்டையில் ஜன.18 -ல் கணினித்தமிழ்ச்சங்கம் சார்பில் மின்னூல் ஆக்க வழிகாட்டி முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் ஜன.18 -ல் கணினித்தமிழ்ச்சங்கம் சார்பில் மின்னூல் ஆக்க வழிகாட்டி முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து புதுக்கோட்டைக் கணினித் தமிழ்ச்சங்க ஒருங்கிணைப்பாளர் கவிஞர் நா.முத்துநிலவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,    

ஐந்து நிலங்களில் கிடந்த தமிழ், அச்சு ஊடகம் வழியே உலகம் முழுவதும் பரவி, தற்போது கணினி இணையம் எனும் ஆறாம் நிலமேறி, ஆறு கண்டங்களிலும் வளர்ந்து வருகிறது.  

இதன் அடுத்த கட்டமாக, பற்பல மேல்நாடுகளில் அச்சுநூல்களைப் போலவே மின்னூல்களும் பரவியுள்ளன. அச்சுநூல் வெளிவரும்போதே அதை மின்னூலாகவும் தரும் வழக்கம் வளர்ந்து, இப்போது அச்சுநூலையும் கடந்து மின் நூலாக மட்டுமே வெளியிடுவதும் அதிகரித்து வருகிறது.

இதனால் உலகம் முழுவதும் நூல்களை அனுப்பும் செலவு குறைந்து கணினி, செல்பேசி வழியாகவே விரும்பும் நூலை குறைந்த விலை கொடுத்து வாங்கவோ,  வாடகை தந்து மின்னூல்களைப் படிக்கும் புதிய பழக்கம் வளர்ந்து வருகிறது.

புதுக்கோட்டைக் கணினித்தமிழ்ச்சங்கம்ஆண்டுக்கொருமுறை “இணையத் தமிழ்ப்பயிற்சி முகாம்” நடத்தி வருகிறது. அதன் அடுத்த கட்டமாக, மின்னூலாக்க முகாம், வரும் 18.01.2017  -அன்று மாலை 5 மணிக்கு மேலராஜவீதியில் உள்ள  மாரீஸ் ஓட்டல் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.

இதில், உலகப்புகழ் பெற்ற “அமேசான்” நிறுவனத்துடன் மின்னூலாக்க ஒப்பந்தம் செய்துள்ள, பெங்களுர் “புஸ்தகா” நிறுவன முதன்மைச் செயல் அலுவலர் பத்மநாபன் பங்கேற்று,  நூலாசிரியர்களுக்கு  மின்னூலாக்கம் பற்றி விளக்கமளிக்கிறார்.

மேலும்,   நூலாசிரியர்கள் விரும்பும் நூல்களையும் அவர்களது அனுமதிக் கடிதத்துடன்  மின்னூலாக்கி விரைவில் வெளியிடுவதற்கான வாய்ப்பு உள்ளதால், ஏற்கெனவே நூல் வெளியிட்டுள்ளவர்கள் மட்டுமின்றி, நூல் வெளியிட வாய்ப்பின்றிக் கையெழுத்தாக வைத்திருக்கும் எழுத்துகளையும் வெளியிடச் செய்யலாம்.

இதற்குக் கட்டணம் ஏதுமில்லை. எனினும்,  முன்கூட்டியே பதிவுசெய்ய வேண்டும். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு,  கணினித் தமிழ்ச் சங்க நிர்வாகிகளை, 94431 93293, 96592 47363, 88703 94188 ஆகிய  எண்களில் தொடர்பு கொள்ளலாம்.  muthunilavanpdk@gmail.com எனும் மின்னஞ்சல் வழியாகவும் தொடர்பு கொண்டு  பதிவு செய்து கொள்ளலாம்.

அச்சுநூல் உள்ளுரில் கிடைக்குமளவுக்கு வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியாதென்பதோடு, அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் இருந்து கொண்டே வாங்கவும் அல்லது வாடகை தந்து கணினியில், செல்பேசியில், கிண்டில் ஈ.புக் ரீடரில் படிக்கவும்  உலகம் முழுவதும் வாசகர்களைப்  பெற்றுத்தரும் மின்னூல் புது ஊடகமாக வளர்ந்து வருகிறது.

எனவே, அச்சு வாகனம் ஏறிவந்த தமிழை, அடுத்தகட்டக் கணினிப் பயணத்திற்குக் கொண்டு செல்ல தமிழ் எழுத்தாளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com