தமிழக அரசு பல்வேறு சாலை விபத்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், அனைவரும் சாலை விதிகளை முறையோடு கடைப்பிடித்தால் மட்டுமே விபத்துக்களைத் தவிர்க்க முடியும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் ஆய்வாளர் ஜே.மகேஸ்குமார் கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர், லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 28-வது சாலைப் பாதுகாப்பு வார விழாவை செவ்வாய்கிழமை தொடங்கி வைத்து அவர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
பள்ளிகளில் சாலை விதிகள் பாடதிட்டத்தில் 5-ம் வகுப்பு முதலே உள்ளது. இந்த சாலை பாதுகாப்பு விதிகளை மாணவர்கள் முழுமையாக உறுதியாகக் கடைபிடித்தாலே பாதிக்கு மேற்பட்ட சாலை விபத்துக்களை தவிர்த்துவிடலாம். மனித உயர் விலைமதிப்பில்லாதது.
மாணவர்கள் இந்த சாலை பாதுகாப்பு விதிகளை பொதுமக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இந்த ஆண்டு சாலை பாதுகாப்பு வார விழாவின் தலைப்பு, உங்கள் பாதுகாப்பு உங்கள் குடும்பத்தைக் காக்கும், சாலையில் விழிப்புடன் இருப்பீர் என்பதாகும். அரசு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினாலும், நாம் சாலை விதிகளை கடைபிடிக்காவிட்டால் அதன் விளைவை நாம் அனுபவித்தே ஆக வேண்டும். இதனால் ஏற்படும் இழப்புகளை தாங்கிக் கொள்வது மிகக் கடினம்.
மாணவர்கள் சாலையில் வாகனங்களிலோ, நடந்தோ செல்லும் போது கவனச் சிதறல் இல்லாமல் செல்ல வேண்டும். குறிப்பிட்ட வயது வந்து, ஓட்டுநர் உரிமமம் பெற்ற பின்னரே மோட்டார் சைக்கிள் ஓட்ட வேண்டும். இதனையும் மீறி சில சமயங்களில் நாம் கவனமாக வாகனத்தில் சென்றாலும், பக்கவாட்டிலிருந்தோ, எதிரிலிருந்தோ, முன்பக்கத்திலிருந்தோ வாகனங்கள் வந்து மோதிவிட்டால், விலைமதிப்பில்லாத உயிர்களை சாலை விபத்துக்களின் போது காப்பாற்ற, தேசிய நெடுஞ்சாலைகளில் அவசர விபத்து சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகிறது. 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தால் அதிகபட்சம் 15 முதல் 20 நிமிடத்திற்குள் சம்பவ இடத்திற்கு வந்து தக்க உதவிகளைச் செய்வார்கள். காவல் துறையின் நெடுஞ்சாலை ரோந்துப் பணி காவலர்கள் போக்குவரத்து விதி மீறல்களைக் கண்டறியும் பொருட்டு 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறார்கள் என்றார் அவர். பின்னார் மாணவர்கள் சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றனர்.
நிகழ்ச்சிக்கு தாளாளர் எம்.கே.முகமது மைதீன் தலைமை தாங்கினார். முதல்வர் ஏ.சுதாகரன் வரவேற்றார். மாணவி புஷ்பகலா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.