புளூவேல் விளையாடிய கல்லூரி மாணவர் வெட்டுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி!

புளூவேல் விளையாடிய கல்லூரி மாணவர் வெட்டுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி!

திருநெல்வேலியில் புளூவேல் விளையாட்டை விளையாடிய கல்லூரி மாணவர், கையில் சூடு மற்றும் வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில்
Published on


திருநெல்வேலி: திருநெல்வேலியில் புளூவேல் விளையாட்டை விளையாடிய கல்லூரி மாணவர், கையில் சூடு மற்றும் வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புளூவேல் விளையாட்டு எனும் ஒருவித அபாயகரமான விளையாட்டில் ஈடுபடுவோர் தற்கொலை செய்யும் சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறிய வண்ணம் உள்ளன. இணையதள விளையாட்டான இது, 50 நாள்கள் தொடர்ச்சியாக விளையாடக் கூடியதாகும்.

இந்த விளையாட்டில் ஈடுபடும் நபர்கள், எதிர்ப்பக்கத்தில் முன்பின் அறிமுகமில்லாத நபர்கள் அளிக்கும் சவாலான காரியங்களைச் செய்து முடிக்க வேண்டும். இதை மறுத்தால், அவரை எதிர்ப்பக்கத்தில் இருப்போர் மிரட்டத் தொடங்கிவிடுவர். இதற்குப் பயந்து, விளையாட்டில் ஈடுபடுவோர் தற்கொலை செய்வதாகக் கூறப்படுகிறது.

ரஷியாவில் முதல்முறையாக கடந்த 2013-ஆம் ஆண்டில் இந்த விளையாட்டு விளையாடப்பட்டது. அப்போது அந்த விளையாட்டின் பெயர் "எஃப்-57'ஆகும். இதில் ஈடுபடுவோர் தாமாக முன்வந்து தற்கொலை செய்வதால், இதற்கு புளூவேல் விளையாட்டு என்று பிற்காலத்தில் பெயர் வந்தது.

அதாவது, நீர்வாழ் உயிரினமான நீளநிறம் கொண்ட திமிங்கலம், கடலில் இருந்து வெளியே வந்து தனது உயிரை விட்டு தற்கொலை செய்வதாகக் கூறப்படுவதுபோல் இந்த விளையாட்டு இருப்பதால், இந்த பெயர் வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தற்போது ஆன்லைனில் விளையாடும் புளூவேல் என்ற பெயரிலான விளையாட்டுக்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், திருநெல்வேலியில் தனியார் கல்லூரியில் படித்து வந்த மாணவர் ஒருவர் இணையதளத்தில் புளூவேல் என்னும் விளையாட்டை விளையாடிய நிலையில், அதன் பாதிப்பில் தனது கையில் சூடு வைத்துக் கொண்டதுடன் வெட்டுக் காயங்களையும் ஏற்படுத்தியுள்ளார்.

இதனைக் கண்டு பதறிப்போன அவரது பெற்றோர் உடனடியாக அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புளூவேல் பாதிப்பால் கல்லூரி மாணவர் ஒருவர் தனக்குத்தானே காயங்களை ஏற்படுத்தியிருப்பது நெல்லை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com