அனிதாவின் தற்கொலைக்கு பின்பும் நீட் தேர்வை ஆதரிப்பவர்கள் கூறும் ‘அந்த ஏழு காரணங்கள்’!

விவசாயத்திற்காக உயிரை மாய்த்துக்கொள்ளும் விவசாயிகள், படிப்பதற்காகத் தூக்கில் தொங்கும் மாணவர்கள், இந்தப் பாவ கணக்கை மற்றவர் தலையில் எழுதும் அரசியல்வாதிகள், போராடிப் போராடி அலுத்துப் போன மக்கள், இதுதான்
அனிதாவின் தற்கொலைக்கு பின்பும் நீட் தேர்வை ஆதரிப்பவர்கள் கூறும் ‘அந்த ஏழு காரணங்கள்’!
Updated on
2 min read

விவசாயத்திற்காக உயிரை மாய்த்துக்கொள்ளும் விவசாயிகள், படிப்பதற்காகத் தூக்கில் தொங்கும் மாணவர்கள், இந்தப் பாவ கணக்கை மற்றவர் தலையில் எழுதும் அரசியல்வாதிகள், போராடிப் போராடி அலுத்துப் போன மக்கள், இதுதான் இன்றைய புதுமை இந்தியா.  

அரியலூர் மாவட்டத்தில் ஒரு ஏழைக் குடும்பத்தை சேர்ந்த அனிதா பன்னிரண்டாம் வகுப்பில் மாநில பாடத்திட்டத்தில் படித்து எடுத்த மதிப்பெண் 1176, மருத்துவ படிப்பிற்கு தேவையாக இருந்த 196.5 கட் ஆஃபையும் எடுத்தும் நடுவில் வந்த ‘நீட்’ தேர்வால் வாய்ப்பை இழந்தார். மருத்துவம் படித்து முடித்திருந்தால் தனது கிராமத்தின் முதல் மருத்துவர் என்ற பெருமை இவருக்குக் கிடைத்திருக்கும், ஆனால் இப்பொழுது தனது மரணத்தால் தமிழகத்தில் பலரை ஏழை மாணவர்கள் படும் பாட்டை பற்றி பேச வைத்த பெருமைதான் அவருக்குக் கிடைத்துள்ளது.

இன்றைய நிலையிலும், நீட் தேர்வை ஆதரிப்பதோடு மட்டும் நில்லாமல் அனிதாவின் தற்கொலை முடிவை விமர்சித்தும் பலர் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். அப்படி அவர்கள் கூறும் அந்த ஏழு முக்கிய காரணங்கள் என்ன?

  1. அனிதாவின் தற்கொலைக்கு காரணம் நீட் தேர்வே இல்லை, போட்டி தேர்வுகளை எதிர் கொள்ளும் அளவிற்குத் தரமான கல்வி மாநில பாடத்திட்டத்தில் இல்லாததே அவரது உயிரிழப்பிற்குக் காரணம்.
  2. மருத்துவர் என்பவர் உயிரைக் காப்பாற்றும் தொழில் செய்பவர், தனது உயிரையே மதிக்கத் தெரியாத ஒருவரால் எப்படி எதிர்காலத்தில் மற்றவர்களது உயிரைக் காப்பாற்ற முடியும்?
  3. திடீரென்று நீட் தேர்வை அறிவித்ததாகக் கூறுகிறார்கள், ஆனால் இந்தத் தகுதி தேர்வு பிற மாநிலங்களில் சென்ற ஆண்டே நடைமுறைப் படுத்தப்பட்டது. ஆனால் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து ஒரு வருடம் மட்டுமே நீதிமன்றத்திலிருந்து விலக்கு பெற்றார், அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு அமலுக்கு வரும் என்ற நிபந்தனையுடனே அந்தத் தீர்ப்பும் வழங்கப்பட்டது, என்ற உண்மை தெரியாமல் பேசுகிறார்கள்.
  4. வாய்ப்புகள் உருவாவதில்லை, உருவாக்கப்படுவது என்பதை உணராமல், ஒரு சிறிய வாய்ப்பை இழந்ததற்கே தற்கொலையை தீர்வாகக் கருதிய மூடத்தனத்தை ஆதரிப்பது மிகவும் தவறானது.
  5. அரசியல் ஆதாயங்களுக்காகவும், மக்களின் நம்பிக்கையை பெரும் நோக்கத்துடனும் நீட் தேர்விலிருந்து தமிழகத்தை மீட்போம் என்ற அரசியல்வாதிகளின் பொய்யான வாக்குறுதிகளை நம்பியது யாருடைய குற்றம்?
  6. நீட் தேர்வால் ஏழை மாணவர்கள் பாதிக்க படுவார்கள் என்று கூறுகிறவர்கள், தமிழகத்தைவிடப் பொருளாதார நிலையில் பின் தங்கியிருக்கும் ஒடிசா, ஜார்க்கண்ட், பீகார் போன்ற மாநிலங்களில் ஏற்கனவே இந்த நீட் தேர்வு அமலில் உள்ளது என்பதைக் கவனிக்கவில்லையா?
  7. மாநில பாடத்திட்டத்தில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவியால் ஏன் நீட் தேர்வில் தேர்ச்சிகூட பெற முடியவில்லை, அப்போது தவறு எங்குள்ளது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள், நீட் தேர்வால் இன்று அனிதா தற்கொலை செய்து கொண்டாள், ஒரு வேளை நீட் தேர்விற்கு விலக்களிக்கப்பட்டு அதனால் தேர்வில் தேர்ச்சி அடைந்த ஒரு மாணவி மருத்துவ படிப்பை படிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டிருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? 

“ஒரு முறை வந்தால் அது கனவு, இரு முறை வந்தால் அது ஆசை, பலமுறை வந்தால் அது லட்சியம்” அந்த வகையில் இங்குக் கனவு கலைக்கப்படவில்லை, ஒரு லட்சியம் அழிக்கப்பட்டுள்ளது என்பதே அனிதாவிற்காக போராடுபவர்களின் வாதம். அனிதாவின் மரணத்திற்குக் காரணம் நீட் தேர்வு அல்ல அந்தத் தேர்வை எதிர்கொள்ளும் அளவிற்கு மாநில பாடத்திட்டம் தரமானதாக இல்லாததே என்பது நீட் தேர்வை ஆதரிப்பவர்களின் கூற்று. குறைந்தது அனிதாவை போல் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் 104 சேவை போல் மனநல ஆலோசகர்களை அரசு ஏற்பாடு செய்வது மேலும் இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com