
திருப்பூர்: புதிதாக வழங்கப்படும் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் (குடும்ப அட்டை) நாள்தோறும் ஏராளமான குளறுபடிகள், தவறான பதிவேற்றம் காரணமாக பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
தமிழக அரசு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் அனைத்து ரேஷன் கடைகளிலும் பழைய ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக ஸ்மார்ட் ரேஷன் கார்டு மூலம் அத்தியாவசிய பொருட்கள் வழங்க நடவடிக்கை மேற்கொண்டது. தற்போது வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் பலகுளறுபடிகள் உள்ளதாக கூறப்படுகிறது. குடும்ப தலைவர், குடும்பத்தலைவி, குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் பல்வேறு தவறுகள் உள்ளதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் குடும்ப தலைவரின் உருவப்படத்துக்குப் பதிலாக விநாயகர் படம் அச்சிடப்பட்டு அட்டை விநியோகம் செய்துள்ள விநோதத்தால் விவசாயி அதிர்ச்சியடைந்தார். இச்சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்த வடுகபாளையம் ஊராட்சியை சேர்ந்த விவசாயி நல்லசிவம் (47). இவருக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டில் அவரது உருவப்படத்துக்கு பதிலாக விநாயகர் உள்ள புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், வீட்டில் உள்ள மற்ற உறுப்பினர்களின் பெயர்கள் சரியாக இருந்தது. உடனே அந்த ரேஷன் கடைக்கு சென்று விவரம் கேட்டார். அப்போது ரேஷன் கடையில் பணியாற்றிய ஊழியர் ஸ்மார்ட் கார்டு பதிவில் புகைப்படம் தவறாகப் பதிவாகியுள்ளது. இது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. நீங்கள் இ-சேவை மையத்திற்கு சென்று படத்தை மாற்றிக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர்.
இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ஸ்மார்ட் கார்டில் குடும்ப தலைவரின் புகைப்படத்திற்கு பதிலாக இன்னொருவரின் புகைப்படம் இருந்தால் கூட ஏதாவது கவனக்குறைவால் ஏற்பட்டது என்று கூறலாம். ஆனால் குடும்ப தலைவருக்கு பதிலாக விநாயகர் படத்தை அச்சிட்டு வழங்கி இருப்பது விநோதமாக உள்ளது. கண்காணிப்பு, சரிபார்ப்புகள் ஏதுமில்லாமல் அவசர கோலத்தில் ஸ்மார்ட் கார்டுகள் அச்சிடப்பட்டு பயனாளிகளிக்கு வழங்கப்படுவதை வைத்தே தெரிகிறது படித்த அதிகாரிகளும் தங்களது பணிகளை சரியாக செய்யாமல் பொதுமக்களின் பணங்களை சம்பலமாக பெறும் அவலம் மீண்டும் மீண்டும் அமபலமாகி வருகிறது. இது குறித்து முறையான விசாரணை நடத்தபோகும் அதிகாரிகள் யார்? என்று மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
கடந்த வாரம் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சரோஜா என்ற பெண்ணின் புகைப்படத்திற்கு பதிலாக திரைப்பட நடிகை காஜல் அகர்வால் படத்தை அச்சிட்டு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டது. நேற்று தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி மணியாம்பாடியைச் சேர்ந்தவர் மகேஷ் சித்தன். இவருக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டில் அவரது உருவப்படத்துக்குப் பதிலாக செருப்பு காலுடன் உள்ள புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டது மட்டுமல்லாமல், மகேஷ் பெயருக்கு அருகே கணவர் சித்தன் பெயருக்கு பதில், மாமனார் சின்னசாமி பெயர் இடம்பெற்ற அட்டையை பயன்பாட்டுக்கு அவரிடம் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.