ஜெயலலிதா மறைவுக்குப் பின் தமிழகம் சந்தித்த சோதனைகள்!

தமிழகத்திற்கு இது சோதனை காலமோ என்னவோ.. என்று மக்கள் புலம்பும் அளவிற்கு இயற்கை சீற்றம் தொடங்கி
ஜெயலலிதா மறைவுக்குப் பின் தமிழகம் சந்தித்த சோதனைகள்!

சென்னை:  தமிழகத்திற்கு இது சோதனை காலமோ என்னவோ என்று மக்கள் புலம்பும் அளவிற்கு இயற்கை சீற்றம் தொடங்கி  பல்வேறு அரசியல் அவலங்களையும் கடந்த ஒரு வருடமாக நாம் சந்தித்து வருகிறோம். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தினால் ஆட்சியையும் அதிகாரத்தையும் தக்கவைத்துக்கொள்ள ஆளும் கட்சித் தரப்பினருக்கிடையே மோதல் ஒரு பக்கம் என்றால், எதிர்க்கட்சிகளின் வார்த்தை ஜால அரசியல், வெற்றுக் கூச்சல், தில்லி தலைமையின் அதிகாரப் பிரயோகம் என்று நடக்கும் அரசியல் நாடகங்களினால், சாமானியன் தலை சுற்றிப்போகும் அளவுக்கு காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும். 

ஜெயலலிதா மறைவுக்குப் பின் முதன் முறையாக சேகர் ரெட்டியின் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இதில் கோடிக்கணக்கான புதிய ரூ.2000 நோட்டுக் கட்டுகள் சிக்கின. இதைத் தொடர்ந்து தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராம் மோகன ராவ் வீட்டிலும் வருமான வரி சோதனை நடைபெற்றது. அங்கும் ரொக்க பணமும், முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

ஜெயலலிதா மறைவுக்குப்பின் அதிமுக 2 அணிகளாக பிரிந்து செயல்பட்ட பின்னர், ஓ. பன்னீர்செல்வம் அணியினரும் எடப்பாடி பழனிசாமி அணியினரும் இணைந்து, தினகரன் குடும்பத்தினரை கட்சியில் இருந்தும் ஆட்சியில் இருந்தும் ஒதுக்கிவைக்க திட்டமிட்டு செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. 

இதற்கிடையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நேரத்தில் அந்தத் தொகுதி மக்களுக்கு பணம் விநியோகிக்கப்படுகிறது என புகார் எழுந்தது. இதையடுத்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, எம்ஜிஆர் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி வீடு, சரத்குமாரின் கொட்டிவாக்கம் வீடு, ராதிகாவுக்கு சொந்தமான ராடான் நிறுவனம் என பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றது. இதில் அமைச்சர் வீட்டில் ரூ. 89 கோடி ரொக்கமும், ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. 

இந்த சூழ்நிலையில் மத்திய அரசுடன் இணைந்து அதிமுக அரசு இணக்கமாக செயல்படத் தொடங்கியதோடு, தங்களை எதிர்ப்பவர்களையும் மத்திய அரசை விமர்சிப்பவர்களையும் அடக்க வருமானவரித் துறையை ஒரு ஆயுதமாக பயன்படுத்துவதாக பல்வேறு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. அதற்கேற்றார்போல் சமீபத்தில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் வரும் ஜிஎஸ்டி தொடர்பான காட்சிகளை நீக்கச் சொல்லிய பா.ஜ.க.வை கண்டித்துப் பேசிய நடிகர் விஷால்  வீட்டிலும், அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது. 

இப்படியாக தொடர்ந்து சோதனைகள் நடந்த வண்ணம்தான் இருக்கிறது. என்றாலும், இந்த சோதனைகளுக்கு பின்னர் எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது போன்ற தகவல்கள் ஏதும் இல்லை. கணக்கில் வராத பணத்தை வைத்திருந்ததாக கூறப்படுபவர்களின் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுத்ததாக தெரியவில்லை. 

இந்நிலையில்தான் இன்று வரலாறு காணாத வகையில், மீண்டும் ஒரு சோதனை தமிழகத்தில் முதல் முறையாக 190 இடங்களில் மாபெரும் வருமான வரி சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. 9 மணி நேரத்திற்கும் மேலாக தொடர் சோதனையில் ஈடுபட்டுள்ள வருமான வரித் துறையின் இந்த நடவடிக்கைகளுக்கு பின்னால் வழக்கம் போல் மத்திய அரசின் தூண்டுதல் இருப்பதாகவே குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

ஒட்டுமொத்தமாக ஒரு குடும்பத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இன்றைய சோதனைக்கு மிக முக்கியக் காரணம், சசிகலா மற்றும் தினகரனின் அரசியல் வாழ்வை அஸ்தமிக்கச் செய்வதுதான் எனவும், இரட்டை இலை சின்னத்தையும் அதிமுக கட்சியையும் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணியினருக்கு மீட்டுக் கொடுக்கும் ஒரு நடவடிக்கை என்றுமே கூறப்படுகிறது. எனவே, கடந்த கால சோதனைகளைப்போல் இதுவும் ஒரு பரபரப்பு செய்தியாகவே  கடந்து போகும் என்றும் சொல்லப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com