என்.எல்.சி பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முயல்வதை அனுமதிக்க முடியாது: ராமதாஸ் கண்டனம்

என்.எல்.சி பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முயல்வதை அனுமதிக்க முடியாது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
என்.எல்.சி பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முயல்வதை அனுமதிக்க முடியாது: ராமதாஸ் கண்டனம்

என்.எல்.சி பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முயல்வதை அனுமதிக்க முடியாது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: - 

என்.எல்.சி. இந்தியா என்று அண்மையில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 15% பங்குகளை பங்குசந்தை மூலமாக தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்கான அறிவிப்பு அடுத்த மாதத் தொடக்கத்தில் வெளியிடப்படும் என்று தெரிகிறது. தமிழகத்தின் அடையாளமாகத் திகழும் என்.எல்.சி. பங்குகளை விற்பது கண்டிக்கத்தக்கது.

பொருளாதார மந்தநிலை காரணமாக 2017-18ஆம் ஆண்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த மத்திய அரசின் வருவாயில் ரூ1.10 லட்சம் கோடி குறையும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதனால் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் ரூ.72,500 கோடி வருவாய் ஈட்ட மத்திய நிதித்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதில் இதுவரை ரூ.49,759 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள இலக்கையும் வரும் மார்ச் மாதத்திற்குள் எட்ட அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக என்எல்சி இந்தியாவின் 15% பங்குகளை ரூ.2500 கோடிக்கு விற்பனை செய்ய அரசு தீர்மானித்துள்ளது. இது தவிர இந்தியன் ஆயில் நிறுவனம், ஊரக மின்மயமாக்கல் நிறுவனம், தேசிய நீர்மின் கழகம்,  செயில் நிறுவனம் ஆகியவற்றின் பங்குகளையும் விற்பனை செய்யப்போவதாக அரசு அறிவித்துள்ளது.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசுக்கு தார்மீக அடிப்படையில் எந்த உரிமையும் இல்லை. 1956-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிலக்கரி நிறுவனத்தின் முதலீடான நிலக்கரி வளம் நிறைந்த நிலங்களை  வழங்கியவர்கள் அப்பகுதியைச் சேர்ந்த உழவர்கள் ஆவர். நெய்வேலியையொட்டிய 23 கிராமங்களைச் சேர்ந்த உழவர்கள் தாங்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த நிலங்களை நிலக்கரி எடுப்பதற்காக விட்டுக் கொடுத்து விட்டு வெளியேறி இருக்காவிட்டால் என்.எல்.சி. இந்தியா என்ற நிறுவனமே உருவாகியிருக்காது. 60 ஆண்டுகளுக்கு முன் நிலம் வழங்கியவர்களுக்கு நியாயமான விலை, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை என அப்போது அளிக்கப்பட்ட எந்த வாக்குறுதியையும் என்.எல்.சி. இந்தியா நிறைவேற்றவில்லை.  அதனால், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தவர்கள் அந்நிறுவனத்தின் பங்குதாரர்களாக கருதப்பட வேண்டும். அவர்களின் ஒப்புதல் இல்லாமல் பங்குகளை விற்க மத்திய அரசு துடிக்கக்கூடாது.

என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்க வேண்டிய தேவையும் இல்லை. நவரத்தினா நிறுவனமான என்.எல்.சி.யின் லாபம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் இந்த நிறுவனம் ரூ.2368.81 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இந்த லாபத்தில் பெரும்பகுதி மத்திய அரசுக்கு  ஈவுத் தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு இருக்கும் போது அதன் 15% பங்குககளை தனியாருக்கு விற்பது பொன் முட்டையிடும் வாத்தை அறுப்பதற்கு சமமான செயலாகவே அமையும்.

என்.எல்.சி. நிறுவன பங்குகளில் 89.32% பங்குகள் மத்திய அரசிடம் உள்ளன. 4.06% வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமும், 3.91% பங்குகள் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களிடமும், 0.96% பங்குகள் காப்பீட்டு நிறுவனங்களிடமும் உள்ளன. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் மத்திய அரசிடம் 75 விழுக்காட்டுக்கும் அதிகமாக இருக்கக் கூடாது என எடுக்கப்பட்ட கொள்கை முடிவின் அடிப்படையில் தான் பங்குகள் விற்கப்படவுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. கட்டாயமாக இதை செய்ய வேண்டுமென்றால் அந்த பங்குகளை என்.எல்.சி. இந்தியா நிறுவனத்திற்கு நிலம் தந்த உழவர்களின் குடும்பங்களுக்கு இலவசமாக தர வேண்டுமே தவிர, தனியாருக்கு விற்கவே கூடாது.

நெய்வேலி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய கடந்த 20 ஆண்டுகளாகவே மத்தியில் உள்ள அரசுகள் முயற்சி செய்து வருகின்றன. இம்முடிவை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தியிருக்கிறது ; மற்ற கட்சிகளும் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் பங்கு விற்பனை முடிவை மத்திய அரசு தற்காலிகமாக கைவிட்டிருந்தது. கடந்த 2013-ஆம் ஆண்டில் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 5% பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு தீர்மானித்த போது அதை எதிர்த்து முதன்முதலில் குரல் கொடுத்தது பாட்டாளி மக்கள் கட்சி தான். அதன்பின்னர் மத்திய அரசு விற்பனை செய்யவுள்ள பங்குகளை தாமே வாங்கிக் கொள்வதாக தமிழக அரசு அறிவித்து, அதை செயல்படுத்தியதால் அந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்தது.

அந்த சுவடு மறைவதற்குள் மேலும் 15% பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முயல்வதை அனுமதிக்க முடியாது. மத்திய அரசின் இம்முடிவுக்கு எதிராக தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு குரல் எழுப்ப வேண்டும். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை எனது தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் என்று எச்சரிக்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com