கல்குவாரி வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: சந்திரபாபுநாயுடு உத்தரவு

கல்குவாரி வெடிவிபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உயர்மட்ட விசாரணைக்குழு அமைக்கவும்,
கல்குவாரி வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: சந்திரபாபுநாயுடு உத்தரவு
Published on
Updated on
1 min read


அமராவதி: கல்குவாரி வெடிவிபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உயர்மட்ட விசாரணைக்குழு அமைக்கவும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு உத்தரவிட்டுள்ளார். 

ஆந்திரா மாநிலம் கர்னூல் அருகே ஹதி பெல்கல் என்ற இடத்தில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வரும் இந்த குவாரியில், நேற்று வெள்ளிக்கிழமை இரவு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இறந்த அனைவரும் ஒடிசா மாநிலத்திலிருந்து வேலைக்காக கர்னூல் வந்தவர்கள். மேலும் இந்த வெடி விபத்தில் 5-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

இதனிடையே வெடி விபத்தினால் கல் குவாரியைச் சுற்றியுள்ள பகுதிக்கு தீ பரவியதோடு, மூன்று டிராக்டர்கள், ஒரு லாரி மற்றும் இரண்டு கொட்டகைகள் எரிந்து சாம்பலானது. 50-க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. வெடி சத்தம் கேட்டதும் வீடுகளிலிருந்து அலறியடித்து ஓடிய பொதுமக்கள் சாலைப்பகுதிகளில் தஞ்சம் அடைந்தனர். 

இந்த சம்பவம் குறித்து, தனது வேதனையை தெரிவித்துள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, காயம் அடைந்தவர்களுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய உயரிய சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரை கேட்டுக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். 

இதனிடையே முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் என் சின்னராஜப்பா மற்றும் முக்கிய நிர்வாகிகள் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு அளிக்கப்படும் என சந்திரபாபு நாயுடு கூறினார். 

மேலும் கல்குவாரிகளை கண்காணிக்கவும், சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் அனைத்து கல்குவாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரியும், விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைகுழு ஒன்று அமைக்கவும் உத்தரவிட்டார்.

இந்திய குற்றவியல் சட்டப்பிரிவு (ஐபிசி) பிரிவு 304 பிரிவு 2, மற்றும் வெடிப்புச் சட்டத்தின் பிரிவு 3 மற்றும் 5 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்னூல் மாவட்ட காவல்துறை அதிகாரி வழக்கை விசாரித்து வருகிறார். சம்பவத்தில் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறினார். 

அதிக அளவிலான டெட்டனேட்டர்கள் மற்றும் ஜெலட்டின் குச்சிகள் பயன்படுத்தியதே வெடி விபத்திற்கு காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com