கேரளாவில் கனமழை: கொச்சி விமான நிலையம் மூடப்பட்டது

கேரளாவில் கனமழை காரணமாக கொச்சி விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. விமான ஓடுதளத்திலும் வெள்ளம் சூழ்ந்திருப்பதால் சனிக்கிழமை (ஆக 18)
கேரளாவில் கனமழை: கொச்சி விமான நிலையம் மூடப்பட்டது
Published on
Updated on
2 min read


கேரளாவில் கனமழை காரணமாக கொச்சி விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. விமான ஓடுதளத்திலும் வெள்ளம் சூழ்ந்திருப்பதால் சனிக்கிழமை (ஆக 18) வரை கொச்சி விமான நிலையத்தின் அனைத்து செயல்பாடுகளும் நிறுத்தி வைக்கப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கேரளாவில் கனமழை வெள்ளத்திற்கு கடந்த 24 மணி நேரத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து பலி எண்ணிக்கை 67-ஆக அதிகரித்துள்ளது. 12 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவின் 14 மாவட்டங்களில் 12 மாவட்டங்கள் கனமழை வெள்ளத்தால் தத்தளிக்கின்றன. இடுக்கி மற்றும் முல்லைப்பெரியாறு அணை உள்பட மொத்தம் 33 அணைகள் திறந்துவிடப்பட்டுள்ளதால் கரையோரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வெள்ளத்தில் சிக்கியவர்களை தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் ராணுவத்தினர் படகுகள் மூலம் மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் ஒன்றரை லட்சம் பேர் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதுவரை மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது. பலரை காணவில்லை என்பதால் உயிர்ச்சேதம் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. 

கண்ணூர், வயநாடு போன்ற பல பகுதிகளில் 20 க்கும் மேற்பட்ட நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதுடன் பம்பை நதியில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் சூழந்துள்ளதால் பக்தர்கள் யாரும் சபரிமலைக்கு வரவேண்டாம் என கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. 

இடுக்கி மாவட்டத்தில் உள்ள வந்தனமேடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

இதற்கிடையே குமரி மாவட்டத்தில் குழித்துறை மற்றும் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் நாகர்கோவில்-திருவனந்தபுரம் பாதையில் ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், பல ரயில்கள் தாமதமாகவும் இயக்கப்பட்டன.

விபத்துகளைக் தவிர்ப்பதற்காக ரயில்களை மணிக்கு 30 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் இயக்க வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அலுவா மெட்ரோ ரயில் நிலையத்திலும் வெள்ளம் சூழ்ந்தது. அங்கிருந்த கட்டடங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. 

கனமழை காரணமாக கொச்சி விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. விமான ஓடுதளத்திலும் வெள்ளம் சூழ்ந்திருப்பதால் சனிக்கிழமை வரை கொச்சி விமான நிலையத்தின் அனைத்து செயல்பாடுகளும் நிறுத்தி வைக்கப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்காலிகமாக கொச்சியில் இருந்து இயக்கப்படும் விமானங்கள் திருவனந்தபுரத்தில் இருந்து இயக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ரயில்,பேருந்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால், மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

முதல்வர்  பினராய் விஜயன் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் தொலைபேசி மூலம் நிலவரத்தைத் தெரியப்படுத்தி கூடுதலாக நிவாரண நிதி ஒதுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

இடுக்கி அணையில் இருந்து விநாடிக்கு 15.74 லட்சம் லிட்டரும், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து 10 லட்சம் லிட்டரும் நீர் திறக்கப்பட்டு இருக்கிறது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம், முழு கொள்ளளவான 142 அடியை எட்டியதை அடுத்து, பினராய் விஜயன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதிய கடிதத்தில் முல்லைப்பெரியாறு அணையை 139 அடியாக வைத்திருக்க கூடுதலாக தண்ணீரைத் திறந்து விடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதனை ஏற்று முல்லைப்பெரியாறு அணை நேற்று முதல் திறந்துவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.