இடைத்தேர்தல் வந்தால் வேட்பு மனு தாக்கல் செய்வேன்: மு.க. அழகிரி பேட்டி

திமுக தலைவர் தேர்தலில் ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்தது குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பெயரை நானும் முன்மொழிய சொல்கிறீர்களா?
இடைத்தேர்தல் வந்தால் வேட்பு மனு தாக்கல் செய்வேன்: மு.க. அழகிரி பேட்டி
Published on
Updated on
1 min read


மதுரை: திமுக தலைவர் தேர்தலில் ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்தது குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பெயரை நானும் முன்மொழிய சொல்கிறீர்களா? என்று கோபமாக கேள்வி எழுப்பிய அழகிரி, இடைத்தேர்தல் வந்தால் வேட்பு மனு தாக்கல் செய்வேன் என தெரிவித்தார்.

திமுவின் முதல் தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி மறைவுக்கு பின்னர், பரபரப்பான சூழ்நிலையில், திமுக தலைவர், பொருளாளர் பதவிக்கான தேர்தல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை தொடங்கியது.

இதில் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் திமுக தலைவர் பதவிக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.  திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியிடம், வேட்பு மனுவை ஸ்டாலின் அளித்துள்ளார். அவருக்கு 65 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிந்தனர்.

இதேபோன்று பொருளாளர் பதவிக்கான வேட்பு மனுவை அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரைமுருகன் தாக்கல் செய்துள்ளார்.

திமுகவின் தலைவராக ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட உள்ள நிலையில், தனது ஆதரவாளர்களுடன் மூன்றாவது நாளாக ஆலோசனை நடத்தி வரும் மு.க. அழகிரியிடம் திமுக தலைவர் தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்தது குறித்து மதுரையில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், நான் என்ன செய்வது? என கேள்வி எழுப்பியதுடன், ஸ்டாலின் தலைவராவதற்கு என்னை முன்மொழிய சொல்கிறீர்களா? என காட்டமாக கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து மு.க. அழகிரி பேசுகையில், ஸ்டாலின் குறித்து இப்போது கருத்து தெரிவிக்க முடியாது. திமுக கட்சித் தேர்தல் பற்றி சொல்ல ஒன்றுமில்லை. நடப்பது நடக்கட்டும். நான் இப்போது என் ஆதரவாளர்களை சந்தித்து வருகிறேன். இடைத்தேர்தல் வந்தால் நாங்கள் வேட்பு மனு தாக்கல் செய்வோம். போட்டியிடுவோம் அப்போது பார்ப்போம் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com