வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.71 கோடி வழங்கினார் நீதா அம்பானி!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.71 கோடி வழங்கினார் நீதா அம்பானி!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கான நிவாரணத்துக்கான நிவாரண நிதியாக ரூ.21 கோடியும், ரூ.50 கோடி மதிப்புள்ள
Published on

திருவனந்தபுரம்: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கான நிவாரணத்துக்கான நிவாரண நிதியாக ரூ.21 கோடியும், ரூ.50 கோடி மதிப்புள்ள நிவாரண பொருட்களையும் வழங்கினார் ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவர் நீதா முகேஷ் அம்பானி.

கேரளத்தில் மே 28-ஆம் தேதி தொடங்கிய பருவமழை மற்றும் அதன் வெள்ள பாதிப்புகளால் 483 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காணாமல் போயினர். மாநிலத்தின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த சேதத்தின் மதிப்பு, மாநிலத்தின் ஆண்டுத் திட்டத்துக்காக மதிப்பிடப்பட்டுள்ள தொகையைக் காட்டிலும் (சுமார் ரூ.37,247 கோடி) அதிகமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

எதிர்பாராத அளவு மழையின் காரணமாகவே இந்தப் பேரிழப்பு ஏற்பட்டது. ஆகஸ்ட் 9 முதல் 15 வரையிலான காலகட்டத்தில் மழையின் அளவு 98.5 மி.மீ.-ஆக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்தது. ஆனால், அதைவிட 3 மடங்கு அதிகமாக, 352.2 மி.மீ. மழை பதிவானது.

சுமார் 57 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், வெள்ள நீர் சூழ்ந்ததால் 14.50 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர். 

100 ஆண்டுகளில் வரலாறு காணாத கனமழை வெள்ளத்தால் உருக்குலைந்த கேரளத்துக்கு மத்திய அரசு நிவாரண உதவியாக இதுவரை ரூ.600 கோடி ஒதுக்கியுள்ளது. மாநில அரசுகளும், தனியார் நிறுவனங்கள், தனி நபர்களும் நிவாரண உதவிகளைச் செய்து வருகின்றனர். பல மாநிலங்களின் மக்கள் முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.1,027 கோடி வந்துள்ளது. இதில், பல்வேறு வங்கிகள் மூலம் ரூ.145 கோடி வரையில் பல்வேறு வங்கிகளின் மூலம் பெறப்பட்டுள்ளன. இதில் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கிகள் மூலம் அதிகயளவில் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காசோலைகள் மூலமாக ரூ.185 கோடி பெறப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மாநிலத்தை மறுகட்டமைப்பு செய்வதற்கு தேவையான நிதியை திரட்டுவது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேளாவில், கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி முதல் வெள்ளம் பாதித்த இடங்களில் ரிலையன்ஸ் அறக்கட்டளை 30 பேர் கொண்ட குழுவை அமைத்து தனது இலவச ஹெல்ப்லைன் மூலம் நிவாரணம் மற்றம் மீட்பு பணிகளைச் செய்து வந்தது. எர்ணாகுளம், வயநாடு, ஆலப்புழா, திரிசூர், இடுக்கி மற்றும் பத்தனம்திட்டா ஆகிய ஆறு மாவட்டங்களில் இருந்து வெற்றிகரமாக 1,600 பேரை இந்த குழு மீட்டது. உடனடி தேவைக்கு உதவும் வகையில், 160 அரசு சாரா நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு உணவு, ஆடை, குளுக்கோஸ் மற்றும் பாத்திரப் பொருட்கள், சுகாதாரம், துப்புரவு பொருட்கள் வழங்கப்பட்டன. அரசுடன் இணைந்து மீட்புப் பணிகளை ரிலையன்ஸ் அறக்கட்டளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தது.  

ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவர் நீத்தா அம்பானி, கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டார். ஹரிபட்டு, பள்ளிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் நிவாரண முகாம்களில் தங்கியிருப்பவர்களை சந்தித்த அவர், அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். 

இந்நிலையில், ரிலையன்ஸ் அறக்கட்டளை ஏற்கனவே அறிவித்தது போல, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளத்திற்கு முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.21 கோடி நிதியும், ரூ.50 கோடி மதிப்புள்ள நிவாரண பொருட்களையும் ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவர் நீதா முகேஷ் அம்பானி, கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து வழங்கினார்.

இதுவரை மக்கள் அளித்துள்ள நிதி உதவிகைளை வைத்து மாநிலத்தை மறுகட்டமைப்பு செய்வதற்கான முதற்கட்ட பணிகளை செய்ய முடியும் என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com