நீ... நான்... நிஜம்! 47: மரபணு என்கிற ஜீன் சுவாமிகள்!

ஒவ்வொரு நாளும் பல நூறு ஜீவராசிகளை நாம் பார்க்கிறோம். இது பூனை... இது நாய்... இது மாடு... ஆடு... இப்படி அவற்றை இன்ன விலங்கு என்று அடையாளம் பிரித்து அறிகிறோம். அதுபோலவே மனிதனையும் கண்ட
நீ... நான்... நிஜம்! 47: மரபணு என்கிற ஜீன் சுவாமிகள்!

ஒவ்வொரு நாளும் பல நூறு ஜீவராசிகளை நாம் பார்க்கிறோம். இது பூனை... இது நாய்... இது மாடு... ஆடு... இப்படி அவற்றை இன்ன விலங்கு என்று அடையாளம் பிரித்து அறிகிறோம். அதுபோலவே மனிதனையும் கண்ட மாத்திரத்தில் இவன் மனிதன் என்று பிரித்துணர்கிறோம். கொஞ்சம் கூடுதல் கவனத்தைச் செலுத்தி இவன் இந்தியன் (ஆசியன்) அதிலும் வடக்கத்திக்காரன் அல்லது தெற்கத்திய படைப்பு என்று நுட்பமாகப் பகுத்து உணர நம்மால் இயல்பில் முடிகிறது. விலங்கையும் மனிதனையும் வேறுபடுத்த  உடல் அமைப்பில் வித்தியாசம் இருக்கிறது. மனிதரிலும் பாகுபடுத்திப் பார்க்க நிறம், கண்கள், மூக்கமைப்பு, தலைமுடி வார்ப்பு இப்படி பல்வேறு காரணிகள் கைகொடுக்கின்றன. மனிதனுக்கு மனிதன் வித்தியாசத்தைத் தருவது எது? ஜாடை, முக அமைப்பு, நிறம் இவற்றை எல்லாம் உள்ளிருந்து வாரி வழங்கும் வள்ளல் யார்? மரபணு என்கிற ஜீன் சுவாமிகள் தான். இந்த வேறுபாடுகள், மாறுபாடுகள், முரண்பாடுகள் இவை கடந்த சமன்பாடு தான் மனிதகுலத்தின் மகத்தான ஆச்சரியம். "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்கிற சமன்பாட்டை வள்ளுவர் சொல்லிவிட்டார். உண்மைதான். பார்வை பட்டதும் "இது மனித வர்க்கம்' என்று அடையாளம் காணப்படுவதால் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது நூற்றுக்கு நூறு உண்மைதான். 

ஆனால் "சிறப்பொவ்வா' என்று மனிதர் கூரான கத்தியை வீசி விட்டாரே அது என்ன? "சிறப்புகள் ஒன்று போல் இருப்பதில்லை' என்பது ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி மனிதகுல சமத்துவத்திற்கு மரண அடி கொடுத்து  விடாதா? இது மில்லியன்  டாலர் கேள்வி.  பதில் இல்லை. இல்லை. இல்லவே இல்லை. வேறுபாடுகள் வேறுபாடுகள் மட்டுமே. அவை உயர்வு, தாழ்வு அன்று என்பதை உய்த்துணர்ந்துவிட்டால் படைப்பின் அற்புதம் தரிசனம் ஆகிவிடும். பார்ப்பதற்கு ஒன்று போலவே இருக்கும் பல மனிதர்களும் திறமையில் வேறுவேறு தான்.

என் தந்தை சொன்ன பழைய கதை ஒன்று சொல்கிறேன். 
ஓர் அரசர் கவிதை ரசிகர். தான் கேள்விப்படாத புதிய கவிதை ஒன்றைத் தம் சபையில் வந்து புலவர் பாடினால் எழுதி வந்திருக்கும் ஏட்டுக்கு நிகராக எடைக்கு எடை பொன் தருகிறேன் என்று அறிவித்து விட்டார். யார் வந்து புதிய கவிதை பாடினாலும் உதட்டைப் பிதுக்கிய மன்னர், ""நல்ல கவிதைதான், ஆனால் பழைய சரக்கு.. திருட்டுக் கவிதை''  என்பார். பதறிப்போன புலவர்கள், ""இப்போதுதான் அரங்கேற்றம் ... புதிய கவிதை...'' என்று பதட்டத்துடன் முறையிட்டால் ஒரு வரி தப்பாமல் பாடலைத் திருப்பிச் சொல்வார் மன்னர். 
""பார் நான் ஏற்கெனவே இதை அறிந்திருக்கிறேன். சந்தேகம் இருந்தால் மந்திரியைச் சொல்லச் சொல்கிறேன்... அமைச்சரே நீர் சொல்லும்'' என்பார். அமைச்சரோ ஒரு வரிவிடாமல் அதே கவிதையைச்  சொல்லிவிட்டு... ""ரொம்பப் பழசு... மன்னா... இதோ உம்பக்கத்தில் நிற்கும் விசிறி வீசுகிற காவலர் கூட அறிவார்'' என்று ஒரு குண்டு வீசுவார். காவலரோ ஒருவரி விடாமல் சொல்லி புலவரை ஓடஓட விரட்டிவிடுவார்.
பீர்பால், தெனாலிராமன் மாதிரியான மதியூகி யோசனை பெற்ற ஒரு புலவர் மன்னரை மடக்க முடிவு செய்தார். கவிதை படித்ததும் மன்னர் வழக்கமான பல்லவியைத் தொடங்கியதும், ""அரசே.. ஊரறிந்த கவிதை இது என்றால் உம்பக்கம் இருக்கும் காவலர் சொல்லட்டும்... அவரால் முடியவில்லை என்றால் அமைச்சர் சொல்லட்டும்... நீர் சொல்ல வேண்டாம்'' என்று மடக்கினார். காவலரோ, அமைச்சரோ சொல்ல முடியாமல் வாய்மூடி நின்றனர். நுட்பமான புலவர் சொன்னார்: ""அரசே.. உங்கள் வித்தை என்ன என்று சொல்லி விடுகிறேன். நீங்கள் ஏக சந்த கிராஹி.. அதாவது ஒரு முறை ஒன்றைக் கேட்டால் மனப்பாடம் ஆகிவிடும் திறன் உடையவர். நாங்கள் புதிய கவிதை ஒருமுறை சொன்னதும் திருப்பிச் சொல்லி விட்டுப் பழைய கவிதை என்கிறீர். உங்கள் அமைச்சரோ துவி சந்த கிராஹி. இரண்டு முறை கேட்டால் மனதில் பதியும் திறன் மிக்கவர். நாங்கள் ஒருமுறை நீங்கள்  மறுமுறை சொன்னதும் இருமுறை ஆகிவிட்டதால் அமைச்சர் சொல்லிவிடுவார். காவலரோ மூன்று முறை கேட்டால் மனனம் செய்யும் திறன் உடையவர். அமைச்சர் சொன்னதும் மூன்றாவது முறை ஆகிவிடுவதால் சொல்லி விடுகிறார். இந்தத் திறமை மூலம் புலவர்களை நீங்கள் வஞ்சனை செய்கிறீர்கள். அதனால்தான் இம்முறை காவலரை முதன்முறை சொல் என்றேன். பின் அமைச்சரைக் கேட்டேன். இருவராலும் இயலவில்லை... என் கண்டு பிடிப்பு சரியா?'' என்று கேட்டார் புலவர். தோல்வியை ஒப்புக் கொண்டார் அரசர். ""சரி... கவிதை எழுதிய ஏட்டுக்கு எடைக்கு எடை பொன் பெற்றுச் செல்லுங்கள்'' என்றார் அரசர். புலவரோ, ""அரண்மனைக் கோட்டைச் சுவர் முழுவதும் கவிதை எழுதி வைத்து விட்டுத்தான் உள்ளே வந்தேன்'' என்று அரசர்  கஜானாவையே கபளீகரம் செய்து ஏமாந்த புலவருக்கெல்லாம் தங்கம் கொடுத்தார். இந்தக் கதையை விடுங்கள். இதில் உள்ள நுட்பமான பகுதியைக் கவனியுங்கள். ஒருமுறை கேட்டாலே சிலருக்கு மனப்பாடம் ஆகிவிடுகிறது. சிலருக்கு இருமுறை... சிலருக்கு மூன்றுமுறை... பலருக்கோ... பலமுறை கேட்டால் மட்டுமே பதியும். ஏன் இந்த வேறுபாடு? எல்லோரும் ஒரே மாதிரியான சமமான திறமையில் இல்லை. உடனே அவசரப்பட்டு உயர்வு தாழ்வுகளை, ஜாதி, குலம், மரபு சமாச்சாரங்களைத் தலைமேல் வைத்துக் கொண்டு கூத்தாடி விடாதீர்கள். மாறுபாடு இருக்கிறது என்பதை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். மாறுபாட்டுக்கான காரணத்தைக் கண்டறிய முயற்சி செய்வோம். பிறகு அதனைச் சரி செய்வதைக் குறித்து அக்கறை கொள்ளுவோம்.
மனிதர்களின் உயரம், நிறம், தோற்றப்பொலிவு, நினைவாற்றல், சாதனைத்திறன், காமம் குறித்த செயல்பாடுகள், இனவிருத்தி, ஆயுள், நோய் எதிர்ப்பு, புதுமை விருப்பம், இவற்றையெல்லாம் தீர்மானிக்கும் பேராற்றல் ஜீன்களுக்கு உண்டு என்பதை விருப்பு வெறுப்பு இன்றி உணரவேண்டும். குணங்கள் கூட ஜீன்களால் தீர்மானம் ஆகின்றன என்பதை அறிவுப்பூர்வமாக விஞ்ஞானிகள் நிரூபணம் செய்துள்ளனர். ஜீன்களால் மட்டுமே என்று நான் எந்த இடத்திலும் சொல்லவில்லை. இதனைத் தயவு செய்து கூர்ந்து உள்வாங்கிக் கொண்டு மேலேபடியுங்கள். மூளையின் செயல் திறனில் சில கூடுதல் சிறப்புகளையும், சில சங்கடமான குறைபாடுகளையும் ஜீன்கள் ஏற்படுத்தி விடுகின்றன என்பதை உற்று உள்வாங்கினால் ஜீன்கள் வெற்றி தோல்வியின் வேர்களாக விளங்குவதை நாம் ஒப்புக் கொள்வோம். 
பேராசிரியர் மணி அவர்கள் புத்தகத்தில் நான் படித்த செய்தி ஒன்றை முன் வைக்கிறேன். "கேட்டல் - பேசல்' மனித குலத்தின் வளர்ச்சிக்கு வெகு முக்கியம். கல்வியின் அடித்தளமே கேட்டல் } பேசலை மையமாகக் கொண்டது. ஆனால் கேட்டல், பேசல், ஊனம் என்றொரு வகை குறைபாடு பிள்ளைகளுக்கு உள்ளது. அது பிள்ளைகளின்  தவறே அன்று. பரம்பரைப் பரிசு அது. நகப என்று சுருங்க அழைக்கப்படும் அக்குறைபாடு நல்ங்ஸ்ரீண்ச்ண்ஸ்ரீ ப்ஹய்ஞ்ன்ஹஞ்ங் ஐம்ல்ஹண்ழ்ம்ங்ய்ற் எனப்படும். இது முழுக்க முழுக்க ஒரு ஜீனில் ஏற்பட்ட குறையால் ஏற்படுவது. இது பாதிக்கப்பட்ட குழந்தைகள் மொழியின் இலக்கணக் கட்டமைப்பை எளிதில் உள்வாங்க முடியாமல் குழம்புவார்கள். சுற்றி வளைத்து ஓர் இலக்கண விதியை உருவாக்கிக் கஷ்டப்படுவார்கள். பூ - ஒருமை - ஒரே பூவைக் குறிக்கிறது. குழந்தைகள் அறியும். பூக்கள் என்றால் பன்மை. பல பூக்களைக் குறிக்கும் என்று ஒருமை பன்மையை வெகுவிரைவில் குழந்தைகள் புரிந்து கொள்ளும். பளிச் சென்று ஈ - ஈக்கள், நாய் - நாய்கள், பசு - பசுக்கள் என்று கள் சேர்த்து பன்மையாகச் சொல்லிவிடுவார்கள். ஆனால் நகப பாதிக்கப்பட்ட பிள்ளைகள் ஒவ்வொரு பன்மையையும் தனித்தனி வார்த்தையாக மனனம் செய்து உள் வாங்க முடியுமே  ஒழிய, ஒன்றிலிருந்து  மற்றொன்றைத் தாமாகவே அறிய மாட்டார்கள். (கற்பூரபுத்தி.. வாழைத்தண்டு புத்தி என்று வகைப்படுத்தினோமே அதில் வாழைத்தண்டு வகை அவர்கள் கற்கும் திறன்.
ஆனால் அதற்காக அவர்களை அவமதிக்கவோ, ஒதுக்கவோ, தண்டிக்கவோ நமக்கு உரிமை இல்லை. அவர்கள் எளிமையாகக் கற்க வழிமுறைகளை உருவாக்குவதே உண்மையான நல்லவர்கள் செய்ய வேண்டிய வேலை. ஆனால் ஜீன்களின் குறைபாடே மூலகாரணம் என்ற உண்மையைப் புறந்தள்ளி விட்டு நீங்கள் கற்பிக்க முடியாது. வேண்டுமென்றே பிள்ளைகள் படிக்கவில்லை என்று அடித்து உதைப்போமே ஒழிய, அரவணைக்கத் தவறி விடுவோம்.
"டிஸ்லெக்ஸியா' போன்ற கல்வி கற்றலில் பிள்ளைகளுக்குள்ள பல்வேறு குறைபாடுகளைப் பற்றிய விஞ்ஞானத் தெளிவு நமது ஆசிரியர்களுக்கும், கல்வித் துறைக்கும் இல்லாமல் போனது பெருந்துயரம். கொஞ்சம் மாறுபாடான தன்மை உடைய பிள்ளைகளை வதைப்பது, அவமதிப்பது, துன்புறுத்துவது சில ஆசிரியர்கள் வழக்கம். கொடூரமாக, ""இந்த மெண்டலை எல்லாம் இங்க ஏன் சேர்க்கிறீங்க.. பைத்தியக்கார ஸ்கூல்ல சேருங்க'' என்று பெற்றோர்கள் துடிக்கத் துடிக்கப் பேசும் ஆசிரியர்களை(!) நானறிவேன். இது கல்வித் துறையின் சாபம். 
இனி "மனித ஜினோம்' புத்தகத்தில் படித்த செய்திகளைத் திரட்டி முன் வைக்கிறேன். மனிதர்கள் அனைவருக்குமே உடல் அமைப்பு கிட்டத் தட்ட ஒரே மாதிரியாக (ஐந்து விரல், ஜீரண உறுப்பு, சுவாசம்) இருப்பதற்கு ஜீன்களே காரணம். அப்படியானால் அறிவுக்கான ஜீன்களும் சமஅளவில் தானே இருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் வேற்றுமைகள் அறிவில் உள்ளன. அப்படியானால் ஜீன்களில் காணப்படும்  சிறு சிறு வேற்றுமைகள் காரணமா என்று ஆய்வு தொடங்கியது. ராபர்ட் ப்ளோமின் என்பவர் 
(தர்க்ஷங்ழ்ற் டப்ர்ம்ண்ய்) ஐஊஎ2த என்ற ஜீன் புத்திக் கூர்மையுடன் தொடர்புடையது என்று கண்டறிந்தார்.
ஐஊஎ2த மிக நீளமான ஜீன். அதாவது 98,000 எழுத்துகள் கொண்டது. இதனிடையே 48 இன்ட்ரான்கள் உள்ளன. இன்ட்ரான் என்பது தகவல் இல்லாத வெற்று எழுத்து வரிசை. பத்திரிக்கைகளில் வரும் பெரிய கட்டுரையின் இடையே எரிச்சலூட்டும் விளம்பரங்களைப் போன்றவை. உருப்படியான தகவல் உடைய ஜீன் எழுத்துக்கள் 7,473 மட்டுமே. ஜீனுக்கு இடையிலேயே கொஞ்சம் திரும்பத் திரும்ப வரும் பல்லவி எழுத்து வரிசையும் காணப்படுகிறது. இந்தப் பல்லவிகளின்  எண்ணிக்கையில் உள்ள வேறுபாடுகள்தான் மனிதர்க்கு மனிதர் மாறும் அறிவுத்திறனுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது.
அயோவா நாட்டு மாணவர்களிடம் தேடிப் பார்த்ததில் ஐஎஊ2த ஜீனின் ஒரு ரகம் அதிபுத்திசாலிக் குழந்தைகளிடம் மட்டும் காணப்பட்டது. இதை எதேச்சையான தொடர்பு என்று புறக்கணிக்க முடியாது. இந்த ஜீன் ரகத்தைக் கொண்டிருந்த குழந்தைகளின் ஐக்யூ - வானது 5 சதம் அதிகமாக இருந்தது. இதனை "ஜீனியஸ் ஜீன்' என்று சொல்ல முடியாவிட்டாலும், "சாதுர்ய ஜீன்' என்றாவது அழைக்கலாம். 
இன்றும் பல விஞ்ஞானிகள் அறிவுக்கென்று ஜீன்கள் இருக்கின்றன என்பதை நம்ப மறுக்கிறார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில், மீண்டும் "உயர் குலம்' (உன்ஞ்ங்ய்ண்ஸ்ரீ)  கொள்கை தலை தூக்கி விடுமோ என்று அவர்கள் அஞ்சலாம்! இதனால், நம்முடைய அறிவு நமது ஜீன்கள் விதித்த "தலைவிதி' என்று மக்கள் வாழ்க்கையில் முயற்சிகளை  விட்டுவிடக்கூடிய அபாயமும் ஏற்படலாம். இப்படியெல்லாம் யாரும் அஞ்சவேண்டிய அவசியமில்லை.
ஆல்ஃப்ரெட் பைனட் (அப்ச்ழ்ங்க் ஆண்ய்ங்ற்) என்ன சொல்லுகிறார் பாருங்கள்.
""ஐக்யூ சோதனைகள், புத்திசாலிக் குழந்தைகளைப் பாராட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்டதில்லை, அறிவுத் தடங்கல் உள்ள குழந்தைகளை இனம் கண்டுபிடித்து அவர்களுக்குத் தக்க பயிற்சி தருவதற்காகவே'' என்கிறார். ""இவர் ஐக்யூ தேர்வுகளை உருவாக்கிய மூலவர்களின் குருபீடத்தில் இருப்பவர்'' என்கிறார் பேரா. க. மணி. "மனித ஜினோம்' புத்தகத்தின் சாரம் இதுதான். மரபணுக்கள் வாழ்வில் பெருந்தாக்கம் ஏற்படுத்தும் வல்லமை உடையவை. அதனால் ஏற்படும் குறைகளைக் கண்டறிந்து அதைக் கடந்து உயரும் வழி காணுதலே உண்மை அறிவு.
(தொடரும்)  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com