2019-ல் 'கை'க்கு கைகொடுக்க வந்த கடவுளின் வாய்ப்பை நழுவவிட்டாரா ராகுல்?: அருண் ஜேட்லி 

ராகுல் காந்தியின் வாதம் சிறப்பானதாக இருந்திருந்தால், 2019 தேர்தலுக்கான ஒரு அருமையான வாய்ப்பாக அமைந்திருக்கும்.
2019-ல் 'கை'க்கு கைகொடுக்க வந்த கடவுளின் வாய்ப்பை நழுவவிட்டாரா ராகுல்?: அருண் ஜேட்லி 

புதுதில்லி:  ரஃபேல் ஒப்பந்தம் குறித்து ராகுல் காந்தி பேசியிருப்பது உலகிற்கு முன்னாள் இந்திய அரசியல்வாதிகளுக்கு உள்ள மதிப்பை காயப்படுத்திவிட்டது என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கடுமையாக குற்றம்சாட்டி உள்ளார். 

மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் மக்களவையில் நேற்று வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம், காரசரமான விவாதத்துக்குப் பிறகு தோல்வி அடைந்தது.

மக்களவையில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது ராகுல் பேசுகையில், பிரதமரின் வெளிநாடு பயணம், கருப்பு பணம், பணமதிப்பிழப்பு, வேலைவாய்ப்பு குறித்து பேசிய ராகுல், ரஃபேல் ஒப்பந்தம் குறித்து மத்திய அரசின் மீது குற்றச்சாட்டை வைத்தார். அப்போது அவர், இந்தியா வந்திருந்த பிரான்ஸ் அதிபரை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குடன் சென்று சந்தித்தேன். அப்போது ரஃபேல் ஒப்பந்தத்தில் எந்த ரகசிய உடன்படிக்கையும் இல்லை என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் என்னிடம் கூறினார்” என்றும் பிரதமர் என் கண்ணைப் பார்த்து பேச வேண்டும்; அதை அவர் தவிர்க்கிறார். பிரதமரின் சிரிப்பில் ஒரு பதற்றம் தெரிகிறது என ராகுல் கடுமையாக விமர்சனம் செய்த ராகுல், பேச்சின் முடிவில், யாரும் எதிர்பார்க்காத வண்ணம், மோடியின் இருக்கைக்குச் சென்று, அவரை கட்டித்தழுவினார். 

ராகுலின் இந்தக் குற்றச்சாட்டை பிரான்ஸ் அரசு மறுத்துள்ளது. பிரான்ஸ் அரசின் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரஃபேல் ஒப்பந்தம் 2008-ஆம் ஆண்டு போடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே ரஃபேல் போர் விமானங்கள் தொடர்பான ரகசியங்கள் காக்கப்படுவதாகவும், வேறு எந்த ரகசிய உடன்பாடு இல்லை என்று பிரான்ஸ் அரசு விளக்கம் அளித்துள்ளது. 

இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் நிதி அமைச்சர் அருண்ஜேட்லி "நம்பிக்கையில்லா தீர்மானமும் அற்பத்தனமும்" என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் கூறியிருப்பதாவது: 

அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது சாதாரண விஷயமல்ல. இந்த விவாதத்தில், வழக்கமாக மூத்த அரசியல் தலைவர்கள் தான் பங்கேற்பார்கள். விவாதத்தின் மூலம் அவர்கள் தங்களின் அரசியல் நிலைகளை உயர்த்திக்கொள்ளவதற்கான வாய்ப்பாக எதிர்பார்க்கப்படுவார்கள். ஆனால், ஒருவர், தேசிய கட்சியின் தேசிய தலைவராகவும், பிரதமராகும் கனவில் இருப்பவரேயானால், அவரின் ஒவ்வொரு வார்த்தைகளும் விலைமதிப்பற்றதாகவும், முக்கியத்துவம் பெற்றதாகவும் இருக்க வேண்டும். அவரது வாதங்களில் உண்மையும், நம்பகத்தன்மையும் வெளிப்படுத்த வேண்டும். உண்மைகள் எப்போதும் புனிதமானவை என்பதை மறந்து அற்பத்தனமாக இருக்கக்கூடாது. பொய் மற்றும் அறியாமையின் கலவையாக இருக்கக்கூடாது என்றார் ஜேட்லி. 

ஆனால், ராகுல் காந்தியின் வாதம் சிறப்பானதாக இருந்திருந்தால், 2019 தேர்தலுக்கான ஒரு அருமையான வாய்ப்பாக அமைந்திருக்கும். கடவுள் அவருடைய கட்சிக்காக உதவி இருக்கலாம் என்றவர் வருந்தத்தக்க வகையில் அமைந்த அவரது பேச்சால், அந்த அற்புதமான பெரிய வாய்ப்பை தவற விட்டுவிட்டார். 

மேலும், முக்கிய தலைவர்கள், உங்களுடனும், உங்கள் முன்னரும் பேசுவதற்கு இனிமேல் தயங்குவார்கள். பிரான்ஸ் அதிபர் மேக்ரானை சந்தித்த ராகுல், தனது மதிப்பை, நம்பகத்தன்மையை குறைத்து கொண்டதுடன், உலக அளவில் இந்திய அரசியல்வாதிகளின் மதிப்பை கடுமையாக காயப்படுத்திவிட்டார். 

ஒரு அரசினுடைய முடிவை அல்லது தகவலை தவறாக திரித்துக் கூறக்கூடாது. அது நன்மதிப்பை குறைத்து விடும் என்று அறிவுரை தெரிவித்தார் அருண் ஜேட்லி.

காங்கிரஸ் ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர், ரபேல் ஒப்பந்தத்தில், ரகசியம் குறித்து கையெழுத்திட்டதை ராகுல் புரிந்து கொள்ளவில்லை. ரகசியம் குறித்த ஒப்பந்தத்தில், முந்தைய அரசு தான் முன்னெடுத்தது என்பது தெரியாமல், பிரான்ஸ் அதிபருடனான சந்திப்பிற்கு மன்மோகன் சிங்கே சாட்சி எனக்கூறி அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்துள்ளார். 

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டுவந்த ஜிஎஸ்டியில் பெட்ரோலியப் பொருட்களை ஒரு பகுதியாக  சேர்க்கப்படவில்லை என்ற உண்மையை அவர் அறியவில்லையா?, பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரிவிதிப்புக்குள் கொண்டு வந்தது இந்த அரசு தான். ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்தவுடன் அதற்கு ஜிஎஸ்டி வரிவிதிக்கப்படும். காங்கிரஸ் தலைவருக்கு பொது விவகாரங்களை பற்றி தெரியாது என்று தெரிகிறது.

ராகுலுக்கு புரிதல் தன்மை இல்லாததால், பலமுறை உண்மைகளை அறியாதவர் என்பதை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார் என்று அருண் ஜேட்லி கூறியுள்ளார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com