ஷாப்பிங் மாலில் பயங்கர தீவிபத்து; தீயில் கருகி 38 பேர் பலி!

ரஷ்யாவின் சைபீரியா மாகாணத்தில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் சிக்கி 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஷாப்பிங் மாலில் பயங்கர தீவிபத்து; தீயில் கருகி 38 பேர் பலி!

மாஸ்கோ: ரஷ்யாவின் சைபீரியா மாகாணத்தில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் சிக்கி 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ரஷ்ய நாட்டின் சைபீரியாவில் கெம்ரோவா நகரில் நேற்று விடுமுறை என்பதால் ஸிம்ன்யாயா விஷ்ன்யா என்ற பிரபல ஷாப்பிங் மாலில் பொதுமக்கள் பலர் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தனர். அப்போது  1,600 சதுர மீட்டர் பரப்பளவில் திடீரென 4வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீயானது மளமளவென மற்ற தளங்களுக்கும் பரவியது.  

இதனால் அங்கு ஷாப்பிங் செய்துகொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு அங்குமிங்கும் ஓடினர். சிலர் ஜன்னல் வழியாக குதித்தும் வெளியேறினர்.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடினர். நூற்றுக்கணக்கான மக்களை வெளியேற்றினர்.

இந்த தீ விபத்தில் ஒரு குழந்தை, 3 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்றும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என முதல்கட்ட தகவல் வெளியானது. 

இந்நிலையில், ஷாப்பிங் மாலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38-ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திரையரங்கு பகுதியில் இருந்து மட்டும் 13 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தீயணைப்புத்துறையின் செய்தித்தொடர்பாளர் சுமார் 40 குழந்தைகள் உட்பட 69 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், 30க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்தில் 200க்கும் மேற்பட்ட வீட்டு விலங்குகளும் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

தீயணைப்பு வீரர்கள் சுமார் 12 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தால் அருகில் உள்ள கட்டிடங்களிலும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. 

பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்துள்ளனர்.

கடந்த 2013-ஆம் ஆண்டு, 23,000 சதுர மீட்டரில் ஸிம்ன்யாயா விஷ்ன்யா என்ற மால் தொடங்கப்பட்டது. இந்த மாலில் கடைகள், பவுலிங் கிளப், குழந்தைகள் மையம், திரையரங்கம், உயிரியல் பூங்கா, 250 கார்கள் நிறுத்தக்கூடிய வசதிகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

தீ விபத்துக்கான காரணம் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து ரஷியன் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com