
சென்னை: எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவின் மூலம் தமிழகத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா இன்று நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு முதல்வர் பழனிசாமி பேசுகையில், எம்ஜிஆர் என்ற மந்திர சொல்லின் துணையோடு அதிமுகவின் ஆட்சி தொடர்ந்து நீடிக்கும். எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ஆடம்பர விழா அல்ல; மக்களுக்கு பயனளிக்கும் விழா. அதிமுக அரசு மக்களுக்கான அரசு; மக்களுக்காக பாடுபடுகின்ற அரசு. ஆங்கிலேயருக்கு பிறகு அதிக முறை ஜார்ஜ் கோட்டையை ஆண்ட கட்சி அதிமுகதான் என்று கூறிய அவர், அதிமுகவின் திட்டங்களை ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டார்.
- சென்னைக்கு அருகே உலகத் தரம் வாய்ந்த புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
- மாம்பாக்கத்தில் துணை மின் நிலையம்
- பள்ளிக்கரணையில் புறநகர் மருத்துவமனை
- கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்படும்.
- விவசாயிகளுக்காக முதல்வரின் வீட்டுக் காய்கறி உற்பத்தி திட்டம் தொடங்கப்படும்.
- சீர்மிகு சென்னை திட்டத்தின் கீழ் ரூ.953 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
- சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ வழித்தட ரெயில் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
- சென்னையில் வீடு கட்டுவதற்கான விதிமுறைகள் தளர்த்தப்படும்.
- ராமாவரம் செல்லும் பூந்தமல்லி சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும்.
இதேபோல் கடல்நீரை குடிநீராக்கும் திட்டப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது என கூறினார்.
அதிமுக அரசு செயல்படாத அரசாக இருந்தால் பல விருதுகளை பெற முடியுமா என எண்ணிப்பார்க்க வேண்டும் என்றவர் ஜெயலலிதா இருந்தபோது சட்டம்-ஒழுங்கு எப்படி இருந்ததோ அப்படிதான் தற்போதும் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது. சட்டத்தின் முன் அனைவரும் சமமாக கருதப்படுகின்றனர்.
அதிமுக அரசால் தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்ந்து வருகிறது. இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற சென்னைக்கு குவிந்து வருகின்றனர். குடிசைகள் இல்லாத சென்னையை உருவாக்கி வருவதாகவும், தமிழகம் சிறந்த ஆளுமை உள்ள மாநிலங்களில் 2வது இடம் பெற்றுள்ளது. ஜெயலலிதா இருந்தபொழுது எப்படி இருந்ததோ அதேபோன்று தொடர்ந்து அதிமுக அரசில் சட்டம் மற்றும் ஒழுங்கு உள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.