
புதுதில்லி: மறைந்த சுஷ்மா ஸ்வராஜின் உடலுக்கு தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
பாஜக மூத்த தலைவரும், வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் (67), உடல்நலக்குறைவு காரணமாக, தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு காலமானார்.
மறைந்த சுஷ்மா ஸ்வராஜின் உடலுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, தில்லி துணைநிலை ஆளுநர் அஜில் பைஜால். யோகாகுரு தேவ், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
பிரதமர் மோடி தலைமையிலான முந்தைய ஆட்சியில் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. இந்த முடிவை அவர் கடந்த நவம்பர் மாதத்திலேயே அறிவித்திருந்தார்.
சுஷ்மா ஸ்வராஜ் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தபோது, உலகின் மூலை முடுக்கில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் அவரிடம் சுட்டுரை மூலம் உதவி கோரினால், சம்பந்தப்பட்ட வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் வாயிலாக, அவர்கள் நாடு திரும்புவதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்வார். இதனால், மக்கள் எளிதில் அணுகக்கூடிய தலைவராக விளங்கினார்.
இந்நிலையில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை வரவேற்று பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் சுஷ்மா ஸ்வராஜ் செவ்வாய்க்கிழமை மாலை பதிவிட்டிருந்தார்.
இந்த அறிவிப்பை பார்ப்பதற்குத்தான் என்வாழ்வில் இத்தனைக் காலம் காத்திருந்தேன் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
இதுவே பொதுவாழ்வில் அவர் வெளியிட்ட கடைசி செய்தியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.