இந்தியாவிடம் அதிநவீன 4 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை ஒப்படைத்தது அமெரிக்கா

அதிநவீன ஆயுதங்கள் கொண்ட, போரில் தாக்குதலுக்கு பயன்படுத்தும் அம்சம் கொண்ட அபாச்சி ஏ-64-இ ரக 4 ஹெலிகாப்டர்களை
இந்தியாவிடம் அதிநவீன 4 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை ஒப்படைத்தது அமெரிக்கா


புதுதில்லி: அதிநவீன ஆயுதங்கள் கொண்ட, போரில் தாக்குதலுக்கு பயன்படுத்தும் அம்சம் கொண்ட அபாச்சி ஏ-64-இ ரக 4 ஹெலிகாப்டர்களை ஒப்பந்தப்படி இந்திய விமானப்படையிடம் அமெரிக்க போயிங் நிறுவனம் இன்று சனிக்கிழமை(ஜூலை 27) ஒப்படைத்தது. 

இந்திய விமானப் படையை நவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் இருந்து, அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட அபாச்சி ஏ-64-இ ரக ஹெலிகாப்டர்கள் 22 ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு, 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதனடிப்படையில், போயிங் நிறுவனத்தின் அரிசோனாவில் உள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் அபாச்சி கார்டியன் ஹெலிகாப்டர்களில் ஒரே ஒரு ஹெலிகாப்டர் மட்டும் இந்திய விமானப் படையிடம் கடந்த மே மாதம் 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது. அமெரிக்க அதிகாரிகளிடம் இருந்து ஏர் மார்ஷல் புட்டோலா பெற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து முதல் கட்டமாக 4 ஹெலிகாப்டர்கள், ஜூலை மாதத்தில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, அமெரிக்காவில் இருந்து அண்டானோவ் ஏஎன்224 விமானத்தின் மூலம் 4 அபாச்சி ஏ-64-இ ரக ஹெலிகாப்டர்கள் கொண்டுவரப்பட்டு உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத்தில் ஹிண்டன் விமானப்படை தளத்திற்கு கொண்டுவரப்பட்டு இன்று சனிக்கிழமை (ஜூலை 27) முதற்கட்டமாக 4 ஹெலிகாப்டர்களை இந்திய விமானப்படை அதிகாரிகளிடம் ஒப்படைத்த அமெரிக்க போயிங் நிறுவனம், அடுத்தவாரத்தில் கூடுதலாக 4 அபாச்சி ஹெலிகாப்டர்கள் ஒப்படைக்கப்படும். 2020 ஆம் ஆண்டில் மீதமுள்ள அனைத்து ஹெலிகாப்டர்களும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. 

இவை உரிய சோதனைக்குப் பிறகு, பதான்கோட் விமானப்படை தளத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு, முறைப்படி இந்திய விமானப் படையில் சேர்க்கப்படும் என இந்திய விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
 
உலகின் அதிநவீன ஹெலிகாப்டர்களில் ஒன்றான அபாச்சி ஒன்றின் விலை ரூ.4,163 கோடி. அதிகபட்சமாக 10 ஆயிரத்து 433 கிலோ எடையையும் தாங்கும் திறன் கொண்டது. இதில் இரு வீரர்கள் பயணிக்க முடியும். இலக்குகளை துல்லியமாகக் குறிவைக்கும் தொழில்நுட்பம் கொண்ட அபாச்சி மணிக்கு 293 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் பெற்றது. வானில் இருந்து தரையில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணைகள், ஒரே நேரத்தில் ஆயிரத்து 200 ரவுண்டுகள் வரை சுடக்கூடிய 30 எம்எம் மெஷின்கன், டாங்குகளை தாக்கி அழிக்கக் கூடிய ஹெல்பயர் ராக்கெட்டுகள் அபாச்சி ஹெலிகாப்டர்களில் பொருத்தப்பட்டுள்ளது. இரவு நேரத்திலும் துல்லியமாக பார்க்க உதவும் தொழில்நுட்பமும் இந்த ஹெலிகாப்டரில் உள்ளது. அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட அபாச்சி ரக ஹெலிகாப்டரால் போர்க்களத்தின் புகைப்படங்களையும் பெற முடியும்.

அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை இயக்குவது மற்றும் பயன்படுத்துவது தொடர்பாக, இந்திய விமானப் படை குழுவுக்கு, அலபாமாவில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com