விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கும் பணி குழந்தையை கையாள்வது போன்றது: இஸ்ரோ தலைவர் சிவன்

விக்ரம் லேண்டர் ஒரு குழந்தையை போன்றது. அதாவது நமது கைகளில் திடீரென ஒரு பச்சிளம் குழந்தை கொடுத்தால், அந்த குழந்தையை பத்திரமாக தனது
இஸ்ரோ தலைவர் கே.சிவன்
இஸ்ரோ தலைவர் கே.சிவன்


சந்திராயன்-2-வின் விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்குவதற்கான இறுதிகட்ட பணிகள் நிறைவு பெற்றுள்ளது என்றும், வேறு யாரும் சென்றிராத இடத்தில் விக்ரம் லேண்டரை தரையிறக்கப் போகிறோம் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். 

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 22-ஆம் தேதி இஸ்ரோ சார்பில் விண்ணுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான்-2, புவி நீள்வட்டப் பாதையிலிருந்து விலகி, நிலவின் நீள்வட்டப் பாதைக்குச் சென்று சுற்றி வருகிறது. இந்த நிலையில், விண்கலத்திலிருந்து லேண்டர் பகுதியை விஞ்ஞானிகள் திட்டமிட்டபடி திங்கள்கிழமை வெற்றிகரமாக பிரித்தனர். 

அதன் மூலம், விண்கலத்தின் ஆர்பிட்டர் பகுதி பிரிக்கப்பட்ட இடத்தில் இருந்தபடியே, நிலவை நீள்வட்டப் பாதையில் சுற்றி வந்துகொண்டிருக்கிறது. 

இந்நிலையில், இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் பிரிந்து நிலவின் அருகில் சுற்றி வருகிறது. இது நாளை சனிக்கிழமை அதிகாலை (செப் 7) 1.30 மணிக்கு நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்க உள்ளது. இதற்காக லேண்டரை தரையிறங்குவதற்கான இறுதிக் கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளது. வேறு யாரும் சென்றிராத இடத்தில் விக்ரம் லேண்டரை தரையிறக்கப் போகிறோம். விக்ரம் லெண்டரை மென்மையாக தரையிறக்குவோம் என்று எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. அதற்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்றார்.

விக்ரம் லேண்டர் ஒரு குழந்தை: விக்ரம் லேண்டர் ஒரு குழந்தையை போன்றது. அதாவது நமது கைகளில் திடீரென ஒரு பச்சிளம் குழந்தை கொடுத்தால், அந்த குழந்தையை பத்திரமாக தனது அரவணைப்பில் வைத்திருப்பதற்கான முயற்சியில் தடுமாறுவீர்கள். குழந்தையும் அங்கும் இங்கும் அசையும், அதை கீழே விட்டுவிடாமல் இருப்பதற்காக மிகவும் கஷ்டப்படுவீர்கள் அல்லவா?

அதேபோன்றதுதான் சந்திரயான் 2-ல் இருக்கும் விக்ரம் லேண்டரும். அதனை நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும் போது குழந்தயை போன்று அங்குமிங்கும் அலைபாயும். ஆனால், அதை உறுதியாக பிடித்து குழந்தையை போன்று தரையிறக்க வேண்டும். இது நுட்பமானது, மற்றும் நுணுக்கமானது. அதனால்தான் அதனைச்சுற்றி 4 எஞ்சின்களுடன் நடுவில் ஒரு எஞ்சினையும் பொருத்தியுள்ளோம். 

அதனைத்தொடர்ந்து நாளை அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணிக்குள் பிரக்யான் ரோவர் நிலவில் தனது ஆய்வை தொடங்கும். நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் விண்கலம் என்ற சாதனையை சந்திரயான்-2 படைக்கும் என்று கூறினார். 

சந்திராயன்-2 திட்டத்தில் இனி எந்த தவறும் நடக்காது. உலகமே உற்றுநோக்கி காத்திருக்கும் சந்திராயன்-2 திட்டத்தின் வெற்றியை நாளை கொண்டாடலாம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com