சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனியிடமிருந்து 2ஜி வழக்கு மாற்றம்: தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

2ஜி அலைக்கற்றை தொடர்பான அத்தனை வழக்குகளையும் சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி இடமிருந்து, ஐஎன்எஸ் மீடியா வழக்கை விசாரித்து வரும் நீதிபதி
சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனியிடமிருந்து 2ஜி வழக்கு மாற்றம்: தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
Published on
Updated on
1 min read


2ஜி அலைக்கற்றை தொடர்பான அத்தனை வழக்குகளையும் சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி இடமிருந்து, ஐஎன்எஸ் மீடியா வழக்கை விசாரித்து வரும் நீதிபதி அஜய்குமார் குஹார் அமர்விற்கு மாற்றி தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறைச் செயலாளர் சித்தார்த் பெஹுரா, ராசாவின் தனிச் செயலாளராக இருந்த ஆர்.கே.சந்தோலியா உள்பட 14 பேர் மீதும் ஸ்வான் டெலிகாம், ரிலையன்ஸ் டெலிகாம், யூனிடெக் வயர்லெஸ் (தமிழ்நாடு) ஆகிய மூன்று தனியார் நிறுவனங்கள் மீதும் சிபிஐ வழக்குத் தொடுத்தது.

இந்த வழக்கில் 2011, ஏப்ரலில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், விதிகளை மீறி தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 122 உரிமங்களை மத்திய தொலைத் தொடர்புத் துறை ஒதுக்கியதால், மத்திய அரசுக்கு ரூ.30,984 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று சிபிஐ குறிப்பிட்டிருந்தது. இந்த வழக்கில் ரிலையன்ஸ் குழுமத்தின் (ஏடிஏஜி) தலைவர் அனில் அம்பானி, அவரது மனைவி டினா அம்பானி, கார்ப்பரேட் இடைத்தரகர் நீரா ராடியா உள்பட மொத்தம் 154 சிபிஐ தரப்பு சாட்சிகள் அளித்த வாக்குமூலங்கள், வழக்கு தொடர்புடைய சுமார் 4,000 பக்கங்கள் நீதிமன்ற விசாரணையின் போது பதிவு செய்யப்பட்டன.

மேலும், சிபிஐ தொடுத்துள்ள மற்றொரு வழக்கில் எஸ்ஸார் குழும மேம்பாட்டாளர்கள் ரவி ருய்யா, அன்ஷுமன் ருய்யா, லூப் டெலிகாம் மேம்பாட்டாளர்கள் கிரண் கேதான், அவரது கணவர் ஐ.பி. கேதான், எஸ்ஸார் குழும உத்திகள் திட்டமிடல் பிரிவு இயக்குநர் விகாஸ் சரஃப் ஆகியோர் மீதும், அவர்கள் சார்ந்துள்ள நிறுவனங்கள் மீதும் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இது தொடர்பான வழக்கு தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், 2ஜி அலைக்கற்றை தொடர்பான அத்தனை வழக்குகளையும் சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி இடமிருந்து, ஐஎன்எஸ் மீடியா வழக்கை விசாரித்து வரும் நீதிபதி அஜய்குமார் குஹார் அமர்விற்கு மாற்றி தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிபதி ஓ.பி. சைனி இம்மாத இறுதியில் ஓய்வுபெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com