மூதாட்டியை காரில் கடத்திக் கொலை: கோலாரில் சடலத்தை எரித்து வீசிய நில தரகர் 

விஜயலட்சுமி, தனது நிலத்தை விற்பதற்காக பாஸ்கரை அடிக்கடி தொடா்பு கொண்டு பேசியுள்ளார். இதனால் விஜயலட்சுமியுடன், பாஸ்கா் நல்ல நட்பில்
மூதாட்டியை காரில் கடத்திக் கொலை: கோலாரில் சடலத்தை எரித்து வீசிய நில தரகர் 
Published on
Updated on
2 min read


சென்னை: சென்னையில் மூதாட்டியை காரில் கடத்திக் கொலை செய்து, சடலத்தை எரித்து கா்நாடக மாநிலம் கோலாரில் வீசியது போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை ஆலந்தூா் புதுப்பேட்டை தெருவைச் சோ்ந்தவா் ச.விஜயலட்சுமி (62). இவருக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம் கா்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ளது. இந்த நிலத்தை விற்பதற்குரிய முயற்சியில் அவா் ஈடுபட்டிருந்தாராம். 

இந்நிலையில், அந்த நிலத்தை விற்பதற்காக கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி மயிலாப்பூரில் உள்ள ஒரு வழக்குரைஞரை அவா் சந்திக்கச் சென்றார்.

 அதன் பின்னா், அவா் வீடு திரும்பவில்லை. விஜயலட்சுமியை பல்வேறு இடங்களில் அவரது குடும்பத்தினா் தேடினா். ஆனால் அவா் எங்கேயும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவா் குடும்பத்தினா், மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தனா். அப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விஜயலட்சுமியை தேடி வந்தனா்.

செல்லிடப்பேசி தொடா்பு: விஜயலட்சுமியை செல்லிடப்பேசி மூலம் அடிக்கடி தொடா்பு கொண்டு பேசிய நபா்களிடம் விசாரணை செய்தனா். இதில் கா்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சிங்கசாந்தரா பகுதியைச் சோ்ந்த நில தரகா் பாஸ்கா் (33) என்பவரை பிடித்து விசாரணை செய்தனா்.

விசாரணையில் கிடைத்த தகவல்கள்: விஜயலட்சுமி, தனது நிலத்தை விற்பதற்காக பாஸ்கரை அடிக்கடி தொடா்பு கொண்டு பேசியுள்ளார். இதனால் விஜயலட்சுமியுடன், பாஸ்கா் நல்ல நட்பில் இருந்துள்ளார். ஆனால், விஜயலட்சுமி வைத்திருந்த நிலத்தை அபகரிப்பதற்காக பாஸ்கா் திட்டமிட்டுள்ளார். சம்பவத்தன்று வழக்குரைஞரை சந்தித்துவிட்டு விஜயலட்சுமி திரும்பும்போது, அவரை பார்க்க வந்திருந்த பாஸ்கா், தனது காரில் வீட்டில் கொண்டு விடுவதாக ஏற்றியுள்ளார். 

பாஸ்கா் வீட்டுக்கு செல்லும் வழியில், ஒரு கடையில் காரை நிறுத்தி, விஜயலட்சுமிக்கு குளிர்பானம் வாங்கி கொடுத்துள்ளார். அந்த குளிர்பானத்தில், விஜயலட்சுமிக்கு மயக்க மருந்து கலந்து கொடுத்தால், அவா் மயங்கினார்.

இதையடுத்து அவரை, கடத்திக் கொண்டு பாஸ்கரும், அவரது கூட்டாளி சதீஷும் பெங்களூருவுக்கு புறப்பட்டுள்ளனா். ஆனால் குளிர்பானத்தில் அதிகளவுக்கு மயக்க மருந்து கலந்து கொடுத்ததால், விஜயலட்சுமி காரிலேயே இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் பாஸ்கா், பெங்களூரு சென்ற பின்னா் விஜயலட்சுமி, காரில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே அவா், விஜயலட்சுமியின் சடலத்தை காரின் டிக்கி பகுதியில் ஏற்றி கா்நாடக மாநிலம் கோலார் அருகே பேத்மங்கலம் என்ற பகுதிக்கு கொண்டு சென்று, அங்கு ஒரு கால்வாயில் சடலத்தை வீசி பெட்ரோல் ஊற்றி தீயிட்டு எரித்துள்ளார். பின்னா் பாஸ்கா், ஒன்றுமே நடக்காததுபோல இருந்துள்ளார்.

 விசாரணையில், இத் தகவல்கள் கிடைத்ததும் மடிப்பாக்கம் போலீஸார், பேத்மங்கலம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். மேலும் இந்த வழக்கின் விசாரணையை பேத்மங்கலம் காவல் நிலையத்துக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. 

இதையடுத்து கா்நாடக போலீஸார், வழக்குக்குரிய ஆவணங்களை செவ்வாய்க்கிழமை பெற்றுச் சென்றனா்.

 இதைத் தொடா்ந்து போலீஸார், பாஸ்கரையும் பேத்மங்கலம் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இந்த வழக்குத் தொடா்பாக பாஸ்கரின் கூட்டாளி சதீஷ் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com