வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ரத்து எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு
By DIN | Published On : 17th April 2019 09:45 AM | Last Updated : 17th April 2019 09:45 AM | அ+அ அ- |

தமிழகத்தில் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு நாளை நடைபெறவிருந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். இதற்கான அறிவிக்கையை சட்ட அமைச்சகம் நேற்று மாலையில் வெளியிட்டது.
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருந்தது. இந்தத் தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் களத்தில் இருந்தார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம், அமமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி, மக்கள் நீதி மய்யம் சார்பில் சுரேஷ் உள்ளிட்ட 23 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், கடந்த மார்ச் 29, 30 ஆகிய தேதிகளில் துரைமுருகன் வீடு, பள்ளி, கல்லூரி ஆகிய இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, துரைமுருகன் வீட்டிலிருந்து ரூ.10 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஏப்ரல் 1, 2 ஆகிய தேதிகளில் துரைமுருகனுக்கு நெருங்கிய உறவினரும், திமுக பகுதி செயலாளருமான பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான சிமென்ட் கிடங்கு, அவரது சகோதரியின் வீடு ஆகிய இடங்களில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் ரூ.11.48 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், வாக்காளர்களுக்குப் பட்டுவாடா செய்வதற்காகப் பணத்துடன் இணைக்கப்பட்டிருந்த பட்டியலும் கைப்பற்றப்பட்டது.
இதனையடுத்து வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ஏ.சி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஏ.சி.சண்முகம் மனு இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதி மணிக்குமார் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...