அத்திவரதரை தரிசனம் செய்தார் கருணாநிதியின் மனைவி ராஜாத்தியம்மாள்
By DIN | Published On : 04th August 2019 07:38 PM | Last Updated : 04th August 2019 07:38 PM | அ+அ அ- |

காஞ்சிபுரம்: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தியம்மாள், இன்று காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசனம் செய்தார்.
காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் நிகழ்வு இந்த ஆண்டு நடைபெற்று வருகிறது. தினமும் வெளி மாவட்டங்கள், பல்வேறு மாநிலங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அத்திவரதரை தரிசித்துச் செல்கின்றனர்.
48 நாட்கள் நடைபெறும் அத்திவரதர் உற்சவத்தின் 35வது நாளான இன்று அத்திவரதர் நீல மற்றும் மஞ்சள் நிற பட்டாடையில், ஏலக்காய், மல்லிகை, தாமரை மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, நைவேத்தியம் செய்யப் பட்டு அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, இதுவரை ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் தரிசித்துள்ளனர். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் காத்திருக்கிறார்கள்.
கடந்த 34 நாட்களில் 55 லட்சம் பேர் தரிசித்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் அதிகயளவில் தரிசனத்துக்கு வந்துள்ளனர். விடுமுறை தினம் என்பதால், அத்திவரதர் தரிசனத்துக்கு காஞ்சிபுரத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
சயன கோலத் தரிசனம் நிறைவுற்று ஆகஸ்டு 17-ம் தேதிவரை நின்ற கோலத்தில் அத்திவரதர் தரிசனம் நடைபெற்று வருகிறது. 35ஆம் நாளான இன்று, கருணாநிதியின் துணைவியாரும், மக்களவை உறுப்பினர் கனிமொழியின் தாயாருமான ராஜாத்தியம்மாள், விஐபி தரிசனம் செய்தார். துளசி மாலை, பாதாம், முந்திரி, உலர் பழங்களை கொடுத்து, ராஜாத்தியம்மாள் தரிசனம் செய்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன் சயன கோலத் தரிசனத்தின் போதும் அத்திவரதரை ராஜாத்தியம்மாள் தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.