கர்நாடகாவில் தொடரும் மழை: 9 பேர் பலி
By DIN | Published On : 09th August 2019 11:15 AM | Last Updated : 09th August 2019 11:15 AM | அ+அ அ- |

பெங்களூரு: வெள்ளத்தால் சூழ்ந்துள்ள வட கர்நாடகத்தில் பெய்து வரும் மழைக்கு இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருதாக தகவல் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து கர்நாடகத்தின் பெலகாவி மாவட்டத்துக்கு விநாடிக்கு 3.85 லட்சம் கன அடி தண்ணீர் வந்துகொண்டுள்ளது. வட கர்நாடகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அடுத்த 5 நாள்களுக்கு மிதமானது முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தக்சிண கர்நாடக பகுதியில், மஞ்சள் நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பெலகாவி மாவட்டத்தில் உள்ள அல்மாட்டி அணைக்கு விநாடிக்கு 3,36,917 கன அடி தண்ணீர் வந்துகொண்டுள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 3,55,340 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
இதேபோல, நாராயணபுரா அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 3.90 லட்சம் கன அடியாக உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு4,09,640 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 492.25 மீட்டரில் 488.28 மீட்டர் ஆக உள்ளது.
வட கர்நாடகாவில் தொடர்ந்து கனமழை பெய்துவருதையொட்டி, பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. தக்சிண கர்நாடக பகுதியில், மஞ்சள் நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
வட கர்நாடகம் உள்பட மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் பொதுமக்கள் தங்கள் கால்நடைகளைப் பாதுகாக்க பேரிடர் மீட்பு படையினர், துணை ராணுவத்தினர், தீயணைப்பு வீரர்களை 080- 23417100 என்ற தொலைபேசி எண்ணிலும், 8277894666 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு உதவி கோரலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கனமழை வெள்ளத்துக்கு இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வெள்ளத்தில் சிக்கியிருந்த 16,875 மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள 272 மறுவாழ்வு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 3,010 கால்நடைகளும் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட கால்நடைகள் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்திய விமானப்படையினர் பெலகாவியில் வெள்ள நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். ரோகி, ஹலோலி, உதகட்டி மற்றும் கிர்டால் ஆகிய இடங்களில் இருந்து 25 மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருதாக தகவல் வெளியாகி உள்ளது.