வேளாங்கண்ணியில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை
வேளாங்கண்ணி விண்மீன் ஆலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்ற பேராலய அதிபர் ஏ.எம்.ஏ. பிரபாகர் அடிகளார் உள்ளிட்டோர். 
வேளாங்கண்ணி விண்மீன் ஆலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்ற பேராலய அதிபர் ஏ.எம்.ஏ. பிரபாகர் அடிகளார் உள்ளிட்டோர். 

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தொடங்கி புதன்கிழமை அதிகாலை வரை கோலாகலமாக நடைபெற்றது.

கீழை நாடுகளின் லூர்து எனப் போற்றப்படுகிறது வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம். இங்கு ஆண்டுப் பெருவிழா, கிறிஸ்துமஸ் பண்டிகை, ஆங்கிலப் புத்தாண்டு ஆகிய நிகழ்ச்சிகள் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

வேளாங்கண்ணியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்ற பக்தர்கள்.
 

இதன்படி, வேளாங்கண்ணி பேராலய விண்மீன் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு வழிபாடுகள் செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணி அளவில்  தொடங்கி புதன்கிழமை அதிகாலை வரை நடைபெற்றன. மறையுரை, கூட்டுத் திருப்பலியுடன் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடுகள் தொடங்கப்பட்டு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய அதிபர் ஏ.எம்.ஏ. பிரபாகர்  கிறிஸ்துமஸ் திருப்பலிகளை நிறைவேற்றினார். உதவி அதிபர் எஸ்.ஏ. சூசைமாணிக்கம், திருத்தலப் பொருளாளர் யாகப்பா ராஜரெத்தினம், உதவிப் பங்குத் தந்தையர் டேவிட் தன்ராஜ், ஆண்டோ ஜேசுராஜ் மற்றும் உதவிப் பங்குத் தந்தையர்கள் வழிபாடுகளில் பங்கேற்றனர்.   

திருப்பலியின் நிறைவில், தேவதைகள் போல உடையணிந்திருந்த சிறுமிகள் கொண்டு வந்த குழந்தை இயேசுவின் திருச்சொரூபத்தை பேராலய அதிபர் ஏ.எம்.ஏ. பிரபாகர் அடிகளார் பெற்றுக் கொண்டு, இயேசு பிறப்பை அறிவிக்கும் வகையில் குழந்தை இயேசு சொரூபத்தை பக்தர்களுக்குக் காட்சிப்படுத்தியவாறு, ஊர்வலமாகக் கொண்டுச் சென்று நள்ளிரவு 12.05 மணிக்குக் குடிலில் வைத்து வழிபாடு மேற்கொண்டார். 

அப்போது, வழிபாட்டில் பங்கேற்றிருந்த பக்தர்கள் இறைப் புகழ்ச்சி வாசகங்களை முழங்கி வழிபட்டனர்.  பின்னர், பேராலய நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு வாழ்த்துச் செய்தி அறிவிக்கப்பட்டது. பக்தர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

மின்னொளியில் ஜொலிக்கும் வேளாங்கண்ணி பேராலயம்

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, பேராலய கீழ்க்கோயில்,  விண்மீன் ஆலயம், பேராலய வளாகம், கோபுரங்கள் என அனைத்துப் பகுதிகளும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளையும், வெளி மாநிலங்களையும் சேர்ந்த திரளான பக்தர்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்ததால், வேளாங்கண்ணி முழுமையும் விழாக்கோலம் பூண்டிருந்தது.

பலத்த பாதுகாப்பு...நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரெத்தினம் தலைமையில், காவல் துறையினர் 225 பேரும், ஊர்க்காவல் படையினர் 75 பேரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். 
     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com