ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்கியது யார்? - அமைச்சர் சி.வி.சண்முகம் விளக்கம்
By DIN | Published On : 03rd July 2019 12:21 PM | Last Updated : 03rd July 2019 12:33 PM | அ+அ அ- |

சென்னை: ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட இயற்கைக்கு எதிரான எந்த திட்டத்துக்கும் தமிழக அரசு அனுமதி வழங்காது என சட்டம் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.
ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது திமுக.
இதையடுத்து ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்கியது யார்? என பேரவையில் திமுக-அதிமுக காரசார விவாதம் நடைபெற்றது.
பேரவையில் திமுக உறுப்பினர் டிஆர்பி ராஜா பேசுகையில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு ஆய்வு செய்ய மட்டுமே திமுக அனுமதி வழங்கியது, உரிமம் வழங்கவில்லை என தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் சண்முகம், திமுக ஆட்சியில் தான் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட அனுமதியை அதிமுக அரசுதான் ரத்து செய்தது என தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட இயற்கைக்கு எதிரான எந்த திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம். மத்திய அரசு அனுமதித்தாலும், மாநி அரசின் ஒப்புதலை பெற்றாக வேண்டும். ஓ.என்.ஜி.சி, மத்திய அரசு ஒப்புதல் கேட்டும் தற்போது வரை அரசு ஒப்புதல் வழங்கவில்லை. எந்த நிறுவனத்திற்கும் தமிழகத்தில் அனுமதி வழங்கப்படவில்லை. ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கும் எந்த காலத்திலும் தமிழக அரசு அனுமதி வழங்காது என அமைச்சர் சி.வி.சண்முகம் உறுதி அளித்தார்.