சந்திரயான்-2 விண்ணில் செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தம்
By DIN | Published On : 15th July 2019 08:08 AM | Last Updated : 15th July 2019 08:08 AM | அ+அ அ- |

ஸ்ரீஹரிகோட்டா: நிலவில் ஆய்வை மேற்கொள்ள உள்ள சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவு தளத்திலிருந்து இன்று திங்கள்கிழமை அதிகாலை 2.51 மணிக்கு ஏவப்பட திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் அனைத்தையும் முடித்துள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள், ராக்கெட் ஏவுவதற்கான கவுன்-டவுனை ஞாயிற்றுக்கிழமை காலை 6.51 மணிக்குத் தொடங்கினர்.
கவுன்-டவுன் இறுதிக்கட்டத்தை எட்டி இருந்த நிலையில், அதிக திறன்கொண்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3-எம்1 ராக்கெட் க்ரையோஜினிக் எஞ்சினுக்கு தேவையான எரிபொருள் நிரப்பும் பணி நடைபெற்றது. சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் பாய 56 நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில், அதிகாலை 1.55 மணியளவில் லகவுன்-டவுனை இஸ்ரோ திடீரென நிறுத்தியது.
திடீரென சந்திரயான் 2 விண்ணில் செலுத்தும் பணி திடீரென நிறுத்தப்பட்டது குறித்து இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்பட 56 நிமிடங்கள் 24 நொடிகள் இருந்த நிலையில் ஏவுகணையில் ஏற்பட்ட கோளாறு கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த கோளாறு காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் சந்திரயான் 2 விண்ணில் செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும், இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சந்திரயான் 2 வேறொரு நாளில் விண்ணில் செலுத்த இருப்பதாகவும், அந்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சந்திரயான்-2 திட்டம் இந்திய மக்களிடையே மட்டுமின்றி, உலக நாடுகளிடையேயும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படுவதை நேரடியாக காண குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்பட ஆயிரக்கணக்கானோர் அங்கு ஆவலோடு திரண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.