'அர்த்தமுள்ள' உரையாடலுக்காக பயங்கரவாத உள்கட்டமைப்பை அகற்ற வேண்டும்: பாகிஸ்தானிடம் அமெரிக்கா வலியுறுத்தல் 

காஷ்மீர் பிரச்னை தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்த கருத்துக்காக அமெரிக்க எம்.பி. மன்னிப்புக் கோரினார்.
'அர்த்தமுள்ள' உரையாடலுக்காக பயங்கரவாத உள்கட்டமைப்பை அகற்ற வேண்டும்: பாகிஸ்தானிடம் அமெரிக்கா வலியுறுத்தல் 

இந்தியாவுடனான 'அர்த்தமுள்ள' உரையாடலுக்காக பயங்கரவாத உள்கட்டமைப்பை அகற்ற வேண்டும் என பாகிஸ்தானிடம் அமெரிக்கா வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. 

அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இம்ரான் கான், அமெரிக்க அதிபர் டிரம்பை வாஷிங்டனில் உள்ள அதிபர் இல்லமான வெள்ளை மாளிகையில் நேற்று திங்கள்கிழமை சந்தித்தார். காஷ்மீர் பிரச்னை குறித்தும் இரு தலைவர்களும் பேசினர். அப்போது, இந்தியா-பாகிஸ்தான் இடையே உள்ள காஷ்மீர் பிரச்னையைத் தீர்க்க விரும்புகிறேன். இந்த விஷயத்தில் நான் உதவ முடியும் என்றால், மத்தியஸ்தராக செயல்படவே விரும்புவேன் என்று டிரம்ப் கூறினார். டிரம்ப்பின் இந்த கருத்தை இம்ரான் கான் வரவேற்றார். மத்தியஸ்தராக அமெரிக்கா செயல்பட்டால் பல லட்சம் மக்களின்  வேண்டுகோள் நிறைவேறும் என்று அவர் கூறியுள்ளார். 

இது தவிர, காஷ்மீர் விஷயத்தில் மத்திஸ்தராக செயல்பட வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மோடி, அண்மையில் (ஜி 20 உச்சி மாநாட்டில்) என்னை சந்தித்த போது கேட்டுக் கொண்டார் என்றும் டிரம்ப் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இதற்கு உடனடியாக மறுப்புத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் பிரதமர் மோடி காஷ்மீர் பிரச்னை தொடர்பாக எவ்வித கோரிக்கையும் விடுக்கவில்லை. காஷ்மீர் பிரச்னை இந்தியா-பாகிஸ்தான் இடையிலானது. இதில் மூன்றாவது நபர் தலையீட்டுக்கு அவசியமில்லை. முதலில் காஷ்மீரில் பயங்கரவாதத்தை தூண்டிவிடுவதையும், இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளை ஆதரிப்பதையும் பாகிஸ்தான் நிறுத்த வேண்டும். ஏற்கனவே உள்ள சிம்லா ஒப்பந்தம், லாகூர் ஒப்பந்தம் ஆகியவற்றை பாகிஸ்தான் முழுமையாகக் கடைப்பிடித்தால் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில், காஷ்மீர் பிரச்னையை தீர்க்க உதவுமாறு மோடி கேட்டுக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்த கருத்துக்காக, அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஹரிஷ் சிரிங்லாவிடம் அமெரிக்க எம்.பி. பிராட் ஷெர்மன் மன்னிப்புக் கோரினார்.  

இதனிடையே அமெரிக்க வெளியுறவு விவகாரங்களுக்கான ஹவுஸ் கமிட்டியின் தலைவர் எலியட் எல் ஏங்கல் இன்று இந்திய தூதர் ஹர்ஷ் ஹர்ஷ் சிரிங்லாவிடம் "காஷ்மீர் பிரச்னை தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் பேச்சுவார்த்தையை நான் ஆதரிக்கிறேன், ஆனால் உரையாடலின் வேகத்தையும் நோக்கத்தையும் இந்தியாவால் மட்டுமே தீர்மானிக்க முடியும்" என தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர்: அதிபர் டிரம்ப் சுட்டிக்காட்டியபடி, பதட்டங்களைக் குறைக்கும் மற்றும் பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழலை உருவாக்கும் முயற்சிகளுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம். இது முதல் மற்றும் முக்கியமானது பயங்கரவாத அச்சுறுத்தலைக் கையாள்வது. இதற்கு உதவுதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே எந்தவொரு வெற்றிகரமான பேச்சுவார்த்தைக்கும் அடித்தளம் அதன் பிராந்தியத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் தொடர்ச்சியான மற்றும் மீளமுடியாத நடவடிக்கைகளை எடுப்பதை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்துள்ளார். 

மேலும் இந்தியாவுடனான 'அர்த்தமுள்ள' உரையாடலுக்காக பயங்கரவாத உள்கட்டமைப்பை அகற்ற வேண்டும் என பாகிஸ்தானிடம் அமெரிக்கா வலியுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com