மோடி மூட்டை கட்டும் காலம் வந்து விட்டது: சத்ருகன் சின்ஹா பேட்டி

பிரதமர் மோடி மூட்டை கட்டிக்கொண்டு புறப்பட வேண்டிய காலம் வந்து விட்டது என்று நடிகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சத்ருகன்
மோடி மூட்டை கட்டும் காலம் வந்து விட்டது: சத்ருகன் சின்ஹா பேட்டி


பிரதமர் மோடி மூட்டை கட்டிக்கொண்டு புறப்பட வேண்டிய காலம் வந்து விட்டது என்று நடிகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சத்ருகன் சின்ஹா தெரிவித்தார். 

மக்களவைத் தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பளிக்காததால், அக்கட்சியிலிருந்து விலகி, காங்கிரஸில் சத்ருகன் சின்ஹா அண்மையில் சேர்ந்தார். இதைத் தொடர்ந்து, பிகார் மாநிலம், பாட்னா சாஹிப் தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டார். 

இந்நிலையில், சத்ருகன் சின்ஹா தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பாஜகவில் நான் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி உள்ளேன். வாஜ்பாயின் பேச்சைக்கேட்டு மனதை பறிகொடுத்து பாஜகவில் சேர்ந்தேன். அப்போது கட்சியில் ஜனநாயகம் இருந்தது.

இப்போது தனிநபர் ஆதிக்கம், சர்வாதிகாரம் மட்டுமே உள்ளது. எனவே, பாஜகவில் இருந்து விலக முடிவு செய்தவுடன், புதிய திசையில் பயணிக்கத் தொடங்குவதற்காக அத்வானியை சந்தித்தேன். 

அப்போது, பாஜகவின் நீண்டகால அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவரான எல்.கே அத்வானியின் ஆசிர்வாதங்களை பெற்றேன். கிட்டத்தட்ட கண்ணீருடன் ‘சரி' என்றுதான் சொன்னார். ‘போகாதே' என்று என்னை தடுக்கவில்லை. எனது அன்பு என்றென்றும் உனக்கு உண்டு என்று ஆசீர்வதித்தார்.

இப்போது நான் சரியான திசைக்கு வந்துள்ளேன். அந்த திசை நல்ல திசையாகவும் உள்ளது.

பாஜக நிறுவனர்களின் உறுப்பினரான எல்.கே.அத்வானி பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார். காந்திநகர் தொகுதியில் பாஜகவின் தலைவரான அமித் ஷா போட்டியிடுகிறார். கட்சியில் பெரிய தலைவர்கள் யாரும் தன்னை தொடர்பு கொள்ளவில்லை என்று பாஜகவின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மோடி மிதமிஞ்சிய நம்பிக்கையில் இருக்கிறார். பாலகோட் தாக்குதல் சம்பவம் இந்த தேர்தலில் வித்தியாசத்தை ஏற்படுத்துமா என்று கேட்டதற்கு “ஒவ்வொரு இந்தியரும் தேசியவாதிதான்” என்று கூறினார்.

தேசியவாத பிரச்னையை உயர்த்துவதன் மூலம் பிரதமர் மோடி மட்டுமே கேள்விகளைக் கேட்கிறார். “எங்கள் கவுரவமிக்க பிரதமர் துப்பாக்கி சூடு மற்றும் சூதாட்ட கொள்கையை நம்புகிறார். நாம் வேலைவாய்ப்பு குறித்து கேட்கும் போது புல்வாமா தாக்குதல் குறித்து பேசுகிறார். மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கேள்விகளுக்கு அவர் ஏன் பதிலளிக்க மறுக்கிறார் என தெரியவில்லை. 

மே 23 ஆம் தேதிக்கு பின்னர் பிரதமர் பதவி வகிக்க மாட்டார் என்று எங்கள் நண்பர் மற்றும் இரும்பு பெண்மணி மம்தா பானர்ஜி சரியாகச் சொன்னார். பிரதமரின் காலாவதி காலம் நெருங்கி விட்டது. மோடி மூட்டை கட்டும் காலம் வந்து விட்டது என சத்ருகன் சின்ஹா தெரிவித்தார். 

காங்கிரஸ் வேட்பாளராக சத்ருகன் சின்ஹாவும், பாஜக வேட்பாளராக அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய சட்ட அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் போட்டியிடுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com