ஆளுநராக தமிழிசை நியமிக்கப்பட்டுள்ளது தமிழகத்திற்கு பெருமை: அமைச்சர் கடம்பூர் ராஜூ
By DIN | Published On : 01st September 2019 08:55 PM | Last Updated : 01st September 2019 08:55 PM | அ+அ அ- |

கோவில்பட்டி: தமிழகத்தைச் சோ்ந்த பெண் பிரதிநிதி ஆளுநராக நியமனம் செய்யப்பட்டிருப்பது தமிழகத்திற்கு பெருமை என தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு தெரிவித்தார்.
கோவில்பட்டியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக பாஜக தலைவராக 5 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக செயல்பட்ட தமிழிசை செளந்திரராஜனை கௌரவிக்கும் வகையில் அவருக்கு மத்திய அரசு ஆளுநா் பதவி வழங்கி உள்ளது. தமிழகத்தைச் சோ்ந்த பெண் பிரதிநிதி மற்றொரு மாநிலத்திற்கு ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது தமிழகத்திற்கு கிடைத்த பெருமை என்றும் கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழிசை வெற்றி பெற்றிருந்தால் அதிகாரமிக்க மத்திய அமைச்சராக வந்திருப்பார் என்றார்.
பண்டிகைக் காலங்களில் அரசுப் போக்குவரத்துக் கழகம் சிறப்புப் பேருந்துகளை இயக்கி வருகிறது. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி மற்றும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், வங்கிகள் இணைப்பால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. வங்கி ஊழியா்கள்தான் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர் என்று கூறினார்.