
பாலக்கோட்டில் உள்ள ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத முகாம் மீண்டும் செயல்படத் தொடங்கியிருப்பதாகவும், இனி சர்ஜிக்கல் தாக்குதல் என்பதையும் தாண்டி இந்தியாவின் பதிலடி இருக்கும் என பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தார் ராணுவ தளபதி பிபின் ராவத்.
சென்னை ஆலந்தூரில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்திற்கு இன்று திங்கள்கிழமை (செப்.23) வருகை தந்த ராணுவ தளபதி பிபின் ராவத், இளம் தலைமையாளர்கள் பயிற்சிப் பிரிவினை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜம்மு-காஷ்மீரில் மக்களுக்கு இடையேயான தகவல் தொடர்பில் எந்த துண்டிப்பும் இல்லை. பயங்கரவாதிகளுக்கும் பாகிஸ்தானில் இருந்து அவர்களை கையாள்பவர்களுக்கும் இடையேயான தகவல் தொடர்புதான் துண்டிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் முடக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுவதை தாம் மறுப்பதாகவும், தொழில், வர்த்தகம், அலுவல்கள் என அங்கு மக்களின் வாழ்க்கை வழக்கம்போல் நடைபெற்று வருகிறது என்றார்.
மேலும், பயங்கரவாதிகள் நம்முடைய எல்லைக்குள் நுழையவே பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இத்தகைய அத்துமீறிய தாக்குதல்களை எப்படி எதிர்கொள்வது என்பது நமக்கு தெரியும். பெரும்பாலான ஊடுருவல் முயற்சிகளை நம்முடைய பாதுகாப்பு படை வீரர்கள் முறியடித்துள்ளார்கள்.
இந்தியாவுக்குள் ஊடுருவுவதற்காக இஸ்ரேல் தயாரித்த லேசர் குண்டுகளால் தாக்கப்பட்ட பாலகோட் முகாமில், சுமார் 129 பயங்கரவாதிகள் தயாராக இருப்பதாகவும், பயங்கவாதிகளை ஊடுருவச் செய்வதற்காகவே எல்லைக்கு அப்பாலிருந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறித் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் அதை எப்படி கையாள வேண்டும் என்பது நமது வீரர்களுக்கு தெரியும். சவால்களை எதிர்கொள்வதற்கு ராணுவம் தயார் நிலையில் உள்ளதாகவும், இனி சர்ஜிக்கல் தாக்குதல் என்பதையும் தாண்டி இந்தியாவின் பதிலடி இருக்கும் என பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தார் பிபின் ராவத்.
இதனிடையே, பாலக்கோட்டில் நடத்தப்பட்டதைப் போன்று மீண்டும் தாக்குதல் நடத்தப்படுமா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஏன் அதையே செய்ய வேண்டும், அதையும் தாண்டி ஏதாவது செய்யக் கூடாதா? என கேட்ட ராவத், என்ன நடக்குமோ என்ற அச்சத்திலேயே எதிரி இருக்கட்டும் என்றார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சிஆர்பிஎஃப்) சென்று கொண்டிருந்த வாகனங்களின் மீது வெடிபொருள் நிரப்பிய காரை மோதி கடந்த மாதம் 14-ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தற்கொலைத் தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்.
நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியலையை ஏற்படுத்திய இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
அதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் பாலாகோட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை விமானங்கள் கடந்த மாதம் 26-ஆம் தேதி குண்டு வீசி பயங்கரவாத பயிற்சி முகாமை தரைமட்டமாக்கியது. இதில் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.