கரோனா நிவாரணப் பொருள்களுடன் நிவாரண நிதியாக மேலும் ரூ.1000 வழங்க நடவடிக்கை: அமைச்சர் கே.சி.கருப்பணன் தகவல்

தமிழக மக்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்களுடன் நிவாரண நிதியாக மேலும் ரூ.1000 வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
பவானி நகராட்சி அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்கும் திட்டத்தை தொடக்கி வைக்கிறார் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன்.
பவானி நகராட்சி அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்கும் திட்டத்தை தொடக்கி வைக்கிறார் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன்.

பவானி: தமிழக மக்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்களுடன் நிவாரண நிதியாக மேலும் ரூ.1000 வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்.

பவானி நகராட்சியில் அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் கே.சி.கருப்பணன்  இன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அவர், செய்தியாளர்களிம் கூறியது : கரோனா பாதிப்பு நீங்கும் வரையில் அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி, கோபி, சத்தி மற்றும் புளியம்பட்டியில் அம்மா உணவகங்களில் பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது.

கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பொதுமக்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாமல் அனைத்துத் துறைகளும் சிறந்த முறையில் இயங்கி வருகிறது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கரோனா நிவாரண நிதி ரூ.1000 மற்றும் அரிசி, பருப்பு, சர்க்கரை மற்றும் உணவுப் பொருட்கள் தமிழக மக்களுக்கு வழங்கப்பட்டது.

இதேபோன்று, இந்த மாதமும் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. மத்திய அரசு தமிழகத்துக்கு கூடுதல் நிதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணம் கிடைத்தவுடன் கரோனா நிவாரண நிதியாக மேலும் ரூ.ரூ.1000 வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசின் நிதி கிடைத்தவுடன் நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பரிசீலனை செய்து வருகிறார்.

தமிழகத்தில் நலவாரியத்தில் பதிவு செய்து தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கேட்கின்றனர். ஆட்சியில் இல்லாதவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆட்சியின் கஷ்டம் தெரிந்தால் இவ்வாறு பேசமாட்டார்கள். கரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையிலும் விமர்சனம் செய்வது வேதனைக்குரியது.

ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 70 பேரில் 66 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள நால்வரும் விரைவில் வீடு திரும்புவர். தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் கரோனா வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் இருந்தது. மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் சுகாதாரத் துறையின் தீவிர நடவடிக்கையால் கரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு, விரைவில் கரோனா பாதிப்பில்லா மாவட்டம் என அறிவிக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com